ஒலிம்பிக் போட்டிகள் இன்று ஆரம்பமாகின்றது. இலங்கை சார்பாக 10 வீர வீராங்கனைகள் பங்கேற்கின்றனர்.
32 ஆவது கோடைகால ஒலிம்பிக் போட்டிகள் ஜப்பான்- டோக்கியோவில் இன்று (23) இலங்கை நேரப்படி மாலை 4.30 மணிக்கு ஆரம்பமாகவுள்ளதுடன் ஆகஸ்ட் மாதம் 8ஆம் திகதி வரை இடம்பெறும். இதற்கான அனைத்து ஏற்பாடுகளையும் ஜப்பான் மும்முரமாக மேற்கொண்டுள்ளது.
விளையாட்டு விழாவின் ஆரம்ப நிகழ்ச்சியில் #இலங்கை சார்பாக கொடியை ஜூடோ வீரர் சாமர நுவனும், ஜிம்னாஸ்டிக் வீராங்கனை மில்கா டி சில்வாவும் ஏந்திச் செல்வார்கள்.
ஒலிம்பிக் போட்டிகளில் 206 நாடுகளைச் சேர்ந்த சுமார் 11,000 வீர வீராங்கனைகள் பதக்கங்களை வெல்லும் எதிர்பார்ப்பில் காத்துக்கொண்டிருக்கின்றனர்.
இலங்கையிலிருந்து 9 வீரர்கள் தகுதிபெற்றுள்ள நிலையில், இலங்கை அணி கடந்த 15ஆம் திகதி ஜப்பான் புறப்பட்டுச் சென்றது. இதில் 4 வீரர்களும், 5 வீராங்கனைகளும் தகுதிபெற்றுள்ளனர்.
இலங்கை வீரர்களுடன் பயிற்சியாளர்கள் உள்ளிட்ட 17 பேர் டோக்கியோ சென்றதாக தேசிய ஒலிம்பிக் சங்கம் அறிவித்துள்ளது.
மூன்றாவது தடவையாக ஒலிம்பிக் செல்கிறார் நட்சத்திர பெட்மிண்டன் வீரரான நிலூக கருணாரத்ன இவர் ஆண்களுக்கான ஒற்றையர் பிரிவு போட்டியில் களமிறங்கவுள்ளார்.
இவர் 2012 லண்டன் மற்றும் 2016 றியோ ஒலிம்பிக் விளையாட்டு விழாக்களில் இலங்கை சார்பாகப் போட்டியிட்டதுடன், இலங்கை அணியின் தலைவராகவும் செயற்பட்டிருந்தார்.
இம்முறை டோக்கியோ ஒலிம்பிக்கில் குதிரைச் சவாரி, ஜிம்னாஸ்டிக், துப்பாக்கி சுடுதல், பெட்மிண்டன், ஜூடோ, நீச்சல் மற்றும் மெய்வல்லுனர் ஆகிய 7 விளையாட்டுகளில் இலங்கை பங்கேற்கிறது.
ஜப்பான் நாட்டு அரசின் விசேட அழைப்பின் பேரில் விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்ஷவும் சிறப்பு விருந்தினராக கலந்துகொள்ளவுள்ளார்.
இலங்கையை பிறப்பிடமாகக் கொண்டவரும், சுவீடனில் வசித்து வருகின்றவருமான மெதில்டா கார்ல்சன் குதிரைச் சவாரி போட்டியில் களமிறங்கவுள்ளார். ஒலிம்பிக் வரலாற்றில் குதிரைச் சவாரிப் போட்டியில் பங்குபற்றும் முதல் இலங்கையர் இவர் ஆவார்.
தேசிய கனிஷ்ட ஜிம்னாஸ்டிக் வீராங்கனையான 18 வயதுடைய மில்கா டி சில்வா, பெண்களுக்கான கலைத்துவ ஜிம்னாஸ்டிக் போட்டியில் களமிறங்கவுள்ளார்.
பெண்களுக்கான 10 மீற்றர் துப்பாக்கி சுடுதல் போட்டியில் டெஹானி எகொடவெலவும், ஆண்களுக்கான ஜூடோவில் சாமர நுவன் தர்மவர்தனவும் பங்குபற்றுகின்றனர்.
நீச்சல் போட்டியில் இலங்கையின் நட்சத்திர நீச்சல் வீரரான மெத்யூ அபேசிங்க 100 மீட்டர் சாதாரண நீச்சல் போட்டியிலும், அனிக்காஹ் கபூர் பெண்களுக்கான 100 மீட்டர் வண்ணத்துப்பூச்சி நீச்சல் போட்டியிலும் களமிறங்கவுள்ளனர். இவர்கள் இருவரும் வைல்ட் கார்ட் முறையில் டோக்கியோ ஒலிம்பிக்கில் பங்குபற்றுவதற்கான வாய்ப்பைப் பெற்றுக்கொண்டுள்ளனர்.
மெய்வல்லுனர் போட்டியில் ஆண்களுக்கான 100 மீட்டரில் யுபுன் அபேகோனும், பெண்களுக்கான 800 மீட்டரில் நிமாலி லியன ஆராச்சியும் பங்குபற்றவுள்ளனர்.
தேசிய மெய்வல்லுனர் வீராங்கனை நிமாலி லியனஆராச்சி பங்குபற்றுள்ளார். 800 மீற்றர் ஓட்டப் போட்டியில் பங்கேற்பார்.
ஓலிம்பிக் போட்டிகள் வரலாற்றில் இதுவரை 2 வெள்ளிப் பதக்கங்களை மாத்திரம் வெற்றி கொண்டுள்ள இலங்கை 2020 டோக்கியோ ஒலிம்பிக்கில் பதக்கங்களை குவிக்கும் கனவோடு களமிறங்குகின்றது.