நெடுந்தீவு மக்களின் போக்குவரத்தில் குறிகட்டுவான் இருந்து நெடுந்தீவு வரையான கடற்போக்குவரத்து என்பது மிக முக்கிய போக்குவரத்தாக காணப்படுகின்றது. இப்போக்குவரத்தில் குமுதினிப்படகின் சேவை என்பது மிக முக்கியமாக அமைந்த விடயம் 45வது வருடத்திலும் தனது சேவையை தளரவிடாது மேற்கொண்டு வருவது யாவரும் அறிந்ததே.
இன்றைய தினம் (பெப்ரவரி 26) மாலை 03.00 மணிக்கு நெடுந்தீவில் இருந்து குறிகட்டுவான் நோக்கி புறப்பட்ட குமுதினிப்படகு குறிகட்டுவான் துறைமுகத்தினை வந்தடைவதற்கு முன்னர் எரிபொருள் இல்லாத நிலையில் குமுதினிப்படகு சேவை இடைநடுவில் நிறுத்தப்பட்டு பின்னர் குறிகட்டுவான் துறைமுகத்தில் இருந்து வேறொரு படகு மூலம் எரிபொருள் வரவிக்கப்பட்டு அதன் பின்னர் மீண்டும் குறிகட்டுவான் கரை நோக்கி குமுதினி புறப்பட்டு குறிகட்டுவான் கரையை சென்றடைந்துள்ளது.
இச் சம்பவத்தால் இன்றைய தினம் பிரயாணம் மேற்கொண்ட சிறுவர் பெண்கள் வயோதிபர் உட்பட அனைத்து பிரயாணிகளும் இடர் நிலைக்கு தள்ளப்பட்டனர்.
நெடுந்தீவுக் கடலில் ஓர் துன்பியல் சம்பவம் இடம் பெற்று இன்னும் அந்நிலையில் இருந்து மக்கள் விடுபடாத நிலையில் இன்றைய சம்பவம் மக்களை மேலும் மன உளைச்சலுக்கு உள்ளாக்கியுள்ளது போக்குவரத்து தக்க எரிபொருளினை சேமித்து படகினை செலுத்த வேண்டிய தேவை உரிய திணைக்களம் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இயந்திரக்கோளாறு என்பது தவறுதலாக இடம் பெறுவது எரிபொருளினை பெற்று படகுச் சேவையை நடாத்த வேண்டியது வீதி அபிவிருத்தி அதிகார சபையின் பொறுப்பே இவ்விடயங்களில் வீதி அபிவிருத்தி அதிகார உரிய கவனம் செலுத்தி மக்கள் உயிருக்கு முக்கியமளிக்க வேண்டும்.
இன்றைய சம்பவம் தொடர்பாக வீதி அபிவிருத்தி அதிகார சபையின் உயர் மட்டம் விசாரணை மேற்கொண்டு உரிய நடவடிக்கை மேற்கொள்வதன் ஊடாக இனி வரும் காலங்களில் இப்படியான சம்பவங்கள் இடம்பெறாமல் தடுக்க ஏற்பாடு செய்யப்படுமா? என்பது மக்களின் கேள்வியாகவே இருக்கின்றது.