இலங்கைக்கு கீழாக நிலவும் வளிமண்டல மேலடுக்கு சுழற்சி காரணமாக வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் பல பகுதிகளுக்கும் தற்போது கிடைக்கும் மழை எதிர்வரும் 11 ஆம் திகதி வரை தொடரும் சாத்தியம் உள்ளது என்று யாழ்ப்பாண பல்கலைக்கழகத்தின் புவியியல் துறை சிரேஸ்ட விரிவுரையாளர் கலாநிதி நாகமுத்து பிரதீபராஜா தெரிவித்துள்ளார்.
குறிப்பாக கிழக்கு மாகாணத்தின் பல பகுதிகளுக்கும் நாளை வரை மிகக் கன மழைக்கு வாய்ப்புள்ளது. ஏற்கனவே பல பகுதிகளில் வெள்ள நீர் தேங்க தொடங்கியுள்ளதால் தாழ்நிலப் பகுதிகளில் உள்ள மக்கள் வெள்ள ஆபத்து தொடர்பாக அவதானமாக இருப்பது அவசியம்.
2023/2024 வடக்கு மற்றும் கிழக்கு மாகாணங்களின் வடகீழ் பருவத்தின் இறுதிச் சுற்று மழை இதனோடு முடிவடையும் என எதிர்பார்க்கப்படுகிறது. எனினும் ஜனவரி இறுதிவரை அவ்வப்போது மிதமான மழை கிடைக்க கூடும்.
தற்போதைய மழை குறைவடைந்ததும் பனி தொடங்கும் என்பதனால் சற்று குளிரான வானிலை தொடரக்கூடும் என அவர் மேலும் தெரிவித்தார்.