இளைஞர்களுக்கான கலாசார பரிமாற்ற நிகழ்ச்சி திட்டத்தின் ஆரம்ப நிகழ்வு நேற்று(நவம்பர் 10) மாலை 4.00 மணிக்கு புதுக்குடியிருப்பு பிரதேச செயலகத்தில் புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயக்காந்தன் தலைமையில் இடம்பெற்றது.
இந்த நிகழ்வில் முல்லைத்தீவு மேலதிக மாவட்ட அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன் அவர்கள் பிரதம விருந்தினராக கலந்து நிகழ்வை சிறப்பித்தார்.
முல்லைத்தீவு மாவட்டதில் 03 நாட்கள் நடைபெறும் குறித்த நிகழ்வானது பொதுநிர்வாக உள்நாட்டலுவல்கள், மாகாணசபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சின் தேசிய மொழிகள் பிரிவினால் 2023 ஆம் ஆண்டின் செயற்றிட்டத்தின் கீழ் “மொழி மூலம் இனங்களுக்கிடையிலான நல்லிணக்கம் மற்றும் கலாசார பரிமாற்றம் பற்றிய புரிதலை ஏற்ப்படுத்துதல்” நிகழ்ச்சித் திட்டத்திற்காக பதுளை மற்றும் முல்லைத்தீவு மாவட்ட இளைஞர்களுக்கிடையே நட்புறவை கட்டியெழுப்பி தேசிய ஒருமைப்பாட்டினை மேம்படுத்தும் பொருட்டு இந்த நிகழ்வானது ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வில் முல்லைத்தீவு மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர் திரு.க.கனகேஸ்வரன்,புதுக்குடியிருப்பு பிரதேச செயலாளர் திரு.ஜெயக்காந்தன், தேசிய மொழிகள் பிரிவின் சிரேஷ்ட உதவி செயலாளர் திரு.சத்தியசீலன், பதவிநிலை உத்தியோகத்தர்கள், மாவட்ட செயலக மற்றும் புதுக்குடியிருப்பு பிரதேச செயலக உத்தியோகத்தர்கள், இளைஞர் யுவதிகள் எனப் பலரும் கலந்துகொண்டனர்.