இலங்கை தமிழரசு கட்சியின் கொழும்பு மாவட்ட கிளைத் தலைவராக தவராசா!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

இலங்கை தமிழரசுக் கட்சியின் கொழும்பு மாவட்டக் கிளைக்கான 2023/24 ஆண்டுக்கான புதிய நிர்வாகக் குழு தேர்வு கொழும்பு பம்பலபிட்டி சனசமூக நிலையத்தில் இடம்பெற்ற கூட்டத்தில் தேர்வு செய்யப்பட்டது.

அதன்படி மீண்டும் தலைவராக ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா ஏகமனதாக தெரிவு செய்யப்பட்டார். செயலாளராக திருமதி. மிதிலைச்செல்வி பத்மநாதன், உபதலைவர்களாக 1.செ.திருச்செல்வன் 2.க.நித்தியானந்தம், உபசெயலாளராக திருமதி பத்மினி சதானந் தன், பொருளாளராக ப.பரமேஸ்வரன், உபபொருளாளராக சி.கந்தசாமி ஆகியோரும் தெரிவு செய்யப்பட்டனர்.

தலைவராக தெரிவு செய்யப்பட்ட ஜனாதிபதி சட்டத்தரணி கே.வி.தவராசா உரையாற்றுகையில், தமிழ் தேசியம் பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட்ட வேண்டும்.

தமிழரசு கட்சி பாதுகாக்கப்பட வேண்டும் என்றால் தமிழ் தேசியவாதிகள் அர்ப்பணிப்போடு மக்களுக்கான அரசியல் செயற்பாடுகளில் ஈடுபட வேண்டும்.

தமிழ்பேசும் மக்களில் ஒரு பெண் உறுப்பினர் கூட பாராளுமன்றத்தில் அங்கம் வகிக்காதது மிகவும் கவலைக்குரிய விடயமாகும்.

எதிர்காலத்தில் இந்நிலை மாற்றப்பட வேண்டும். நடப்பாண்டு நிர்வாகக் குழு தமிழ்த் தேசியத்தை நிலை நிறுத்துவதில் அர்ப்பணிப்போடு பங்காற்றும் என்றும் நம்பிக்கை வெளியிட்டார்.

தமிழ்த் தேசிய அரசியல் செயற்களத்தில் கொழும்பு வாழ் தமிழர்களும் பங்காளர்களாக மாறுவதற்கான காலம் கனிந்து விட்டது என்றே இத் தெரிவுகள் நமக்கு பறைசாற்றுகின்றன.

புதிய தலைமுறையில் இளைஞர், யுவதிகளை முன்னிறுத்தி பல்வேறு வெற்றிகரமான வேலைத் திட்டங்களை முன்னெடுப்பதற்கான முயற்சிகள் புதிய நிர்வாகக் குழுவினால் மேற்கொள்ளப்படும் என்றும் தெரிவித்தார்.

Share this Article