இலங்கை அச்சகத்தார் சங்கத்தின் ஏற்பாட்டில் அச்சிடல், பொதியிடல், பட்டியலிடல், முத்திரையிடல் மற்றும் கிராஃபிக் என்பவற்றைக் காட்சிப்படுத்தும் ‘இலங்கை அச்சக மற்றும் வர்த்தகக் கண்காட்சி – 2026’ இன்று வெள்ளிக்கிழமை (19/06) கொழும்பு பண்டாரநாயக்க ஞாபகார்த்த சர்வதேச மாநாட்டு மண்டபத்தில் ஆரம்பமாகவுள்ளது.
எதிர்வரும் ஞாயிற்றுக்கிழமை (21/06) வரை நடைபெறவிருக்கும் இக்கண்காட்சிக்கு இணையாக நாடளாவிய ரீதியில் அச்சகத்துறையில் சிறந்து விளங்குகின்ற மற்றும் புத்தாக்கத்தில் ஈடுபடுகின்ற அச்சக உரிமையாளர்களுக்கான அங்கீகாரத்தை வழங்கும் விருது வழங்கல் விழா நாளை சனிக்கிழமை (20/06) கொழும்பு சினமன் லைஃப் ஹோட்டலில் நடைபெறவுள்ளது.
இவ்வருடம் ‘அச்சகத்துறையின் எதிர்காலத்துக்காக புத்தாக்கம் மற்றும் நிலைபேறானதன்மையை ஊக்குவித்தல்’ எனும் தொனிப்பொருளில் இக்கண்காட்சி ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. நவீன தொழில்நுட்பங்கள், தன்னியக்கத் தொழில்நுட்பம், செயற்கை நுண்ணறிவு, டிஜிட்டல் முறைமையிலான அச்சிடல் மற்றும் பொதியிடல் ஆகிய துறைகளில் உலகளாவிய ரீதியில் ஏற்படும் மாற்றத்தையே இத்தொனிப்பொருள் பிரதிபலிக்கிறது.
இக்கண்காட்சியானது அச்சிடல் மற்றும் பொதியிடல் துறைகளுக்கு மாத்திரம் மட்டுப்படுத்தப்பட்டதல்ல. மாறாக உற்பத்தியாளர்கள், ஏற்றுமதியாளர்கள், ஆடையுற்பத்தி நிறுவனங்கள், மருந்து நிறுவனங்கள், கல்வி நிறுவனங்கள், தொழில்முனைவோர், அரச முகவரகங்கள், சிறிய மற்றும் நடுத்தர தொழிற்துறைகள் உள்ளிட்ட அனைத்தும் இக்கண்காட்சியின்போது காட்சிப்படுத்தப்படும்.