முல்லைத்தீவைச் சேர்ந்த குழந்தைகள் உட்பட தமிழர்கள் 7 பேர் அகதிகளாக நேற்றையதினம் (ஏப்ரல் 28) வெள்ளிக்கிழமை தனுஷ்கோடி மணல் திட்டுப் பகுதியில் வந்திறங்கியதாக இந்தியச் செய்திகள் தெரிவிக்கின்றன.
ராமநாதபுரம் மாவட்டம் தனுஷ்கோடி அருகே உள்ள 2 ஆவது மணல் திட்டில் இன்று காலை குழந்தைகள் உட்பட 7 பேர் நின்றதைக் கடலுக்குச் சென்ற மீனவர்கள் அவதானித்தனர். இது தொடர்பில் அவர்கள் கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸாருக்கு தகவல் தெரிவித்தனர்.
இதையடுத்து ஹோவர் கிராப்ட் கப்பல் மூலம் அங்கு விரைந்து சென்ற கடலோர பாதுகாப்புக் குழும பொலிஸார், அங்கு நின்று கொண்டிருந்த இலங்கையைச் சேர்ந்த 7 பேரையும் மீட்டனர்.
அவர்களிடம் முன்னெடுக்கப்பட்ட விசாரணையில், அவர்கள் முல்லைத்தீவு, தீர்த்தக்கரைப் பகுதியைச் சேர்ந்தவர்கள் எனத் தெரியவந்தது.
ஜோப்ரி மகன் நியூட்டன் வில்லியம்(வயது 43), அவரது மனைவி வனிதா (வயது 38), மகன்கள் விஷால் (வயது 15), டோனி (வயது 10), ஜோன் (வயது 8), அதே பகுதியைச் சேர்ந்த அலெக்ஸ் என்பவரின் மனைவி ஷாலினி, அவருடைய ஒன்றரை வயது குழந்தை ஆதீஷ் ஆகியோரே மீட்கப்பட்டுள்ளனர்.
விசாரணைக்கு பின்னர் மண்டபம் மரைன் பொலிஸாரிடம் ஒப்படைக்கப்பட்ட இவர்கள், உரிய விசாரணைக்குப் பின்னர் மண்டபம் முகாமிலுள்ள இலங்கைத் தமிழர் மறுவாழ்வு முகாமில் தங்க வைக்கப்பட்டனர்.