தமக்கு TIN இலக்கம் கிடைக்காவிடின் அல்லது இலக்கத்தைப் பெறுவதில் ஏதேனும் சிக்கல்கள் இருப்பின் மாகாண உள்நாட்டு இறை வரித் திணைக்களத்திற்கு அல்லது பிரதேச செயலகத்திற்கு அறிவிக்க முடியும் என போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் வெகுஜன ஊடகத்துறை அமைச்சர், அமைச்சரவைப் பேச்சாளர் பந்துல குணவர்தன தெரிவித்துள்ளார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று (ஜனவரி 9) நடைபெற்ற அமைச்சரவை தீர்மானங்களை அறிவிக்கும் செய்தியாளர் மாநாட்டில் வைத்து அவர் இந்த விடயத்தை கூறியுள்ளார்.
மேலும் தெரிவிக்கையில், புதிய முறையொன்று அறிமுகப்படுத்தப்படும் போது ஆரம்ப காலத்தில் இவ்வாறான பிரச்சினைகள் ஏற்படுவதுண்டு.
வரி செலுத்துவோர் அடையாள எண்ணைப் (TIN) பெறாததற்காக வழக்குத் தொடருதல் அல்லது நீதிமன்றத்திற்குப் பரிந்துரைப்பது போன்றவற்றில் எந்த முடிவும் எடுக்கப்படவில்லை, மேலும் அதற்கான கால அவகாசம் வழங்கப்பட்டுள்ளது.
முறைசாரா அமைப்பை ஒரு முறையான அமைப்பிற்குள் கொண்டு வருவதை ஒரே இரவில் செய்ய முடியாது. தற்சமயம் பலர் TIN இலக்கத்தை பெற முயற்சிப்பது நல்ல விடயம்.
ஆனால் ஒரே தடவையில் பலர் தரவுகளை உட்படுத்த முயலும்போது அங்கு சில தாமதங்கள் ஏற்படலாம். இந்த சூழ்நிலைகள் சிறிது நேரத்தில் சீரமையும்.
எனினும், TIN இலக்கம் பெற்ற அனைவரும் வரி செலுத்த வேண்டியதில்லை, அந்த வரிக்கு உட்பட்டவர்கள் மாத்தரமே வரி செலுத்த வேண்டும் என்றும் அமைச்சர் குறிப்பிட்டுள்ளார்.