“வளமான நாடு – அழகான வாழ்க்கை” தேசிய நிகழ்ச்சித்திட்டத்தின் கீழ், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சினால் முன்னெடுக்கப்படும் “வாழ்க்கைக்கான வலிமை” வீடமைப்புத் திட்டத்தின் கீழ், சாவகச்சேரி பிரதேச செயலகப் பிரிவில் நிர்மாணிக்கப்பட்ட வீடொன்று இன்றைய தினம் (25.11) பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளிக்கப்பட்டது.
அந்தவகையில், சரசாலை தெற்கு கிராமத்தில் தெரிவு செய்யப்பட்ட பயனாளிக்காக நிர்மாணிக்கப்பட்ட வீட்டினை, மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் திருமதி சரோஜா சாவித்திரி போல் ராஜ் பிரதம அதிதியாகக் கலந்துகொண்டு திறந்து வைத்து, பயனாளியிடம் உத்தியோகபூர்வமாகக் கையளித்தார்.
சிறுவர் இல்லங்கள் அல்லது சமூகப் பராமரிப்பு நிறுவனங்களில் வளர்ந்து, பின்னர் சமூகத்துடன் இணைக்கப்பட்டு தற்போது குடும்ப வாழ்க்கையை முன்னெடுத்து வருபவர்களின் வாழ்வாதாரத்தையும் குடும்பப் பாதுகாப்பையும் மேம்படுத்தும் நோக்கில் இத்திட்டம் முன்னெடுக்கப்படுகிறது.
யாழ்ப்பாண மாவட்டத்தில் இத்திட்டத்தின் கீழ் மொத்தமாக 49 பயனாளிகள் தெரிவு செய்யப்பட்டுள்ளனர். இத்திட்டத்தின் கீழ் நிர்மாணிக்கப்படும் ஒவ்வொரு வீட்டினதும் பெறுமதி 20 இலட்சம் ரூபாவாகும். அவர்களில் 34 பேர் சிறுவர் இல்லங்களில் வளர்ந்து சமூகத்துடன் இணைக்கப்பட்டவர்களாவர். ஏனைய 15 பயனாளிகளும் பாதிப்புக்குள்ளாகக்கூடிய சிறுவர்களைக் கொண்ட குடும்பங்களைச் சேர்ந்தவர்களாவர் என்பது குறிப்பிடத்தக்கது.
இந் நிகழ்வில் பாராளுமன்ற உறுப்பினர் கருணாநாதன் இளங்குமரன், யாழ்ப்பாண மாவட்ட அரசாங்க அதிபர் மருதலிங்கம் பிரதீபன், சாவகச்சேரி பிரதேச செயலாளர் F. C. சத்தியசோதி, யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன், சாவகச்சேரி பிரதேச ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் கே. பிரகாஷ், கிராம அலுவலர் உள்ளிட்ட பலர் கலந்துகொண்டனர்.