மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் உபகுழுக் கூட்டம்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் தலைமையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்தில் முன்னெடுக்கப்படும் அபிவிருத்தித் திட்டங்களின் முன்னேற்றம் தொடர்பான மாவட்ட உபகுழுக் கூட்டம் இன்று (25/11) காலை  யாழ்ப்பாண மாவட்டச் செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றது.


இக்கூட்டத்தில் யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் கருணைநாதன் இளங்குமரன், மேலதிக அரசாங்க அதிபர் கே. சிவகரன், யாழ்ப்பாண மாவட்ட ஒருங்கிணைப்புக் குழுவின் இணைப்பாளர் எஸ். கபிலன் கலந்துகொண்டனர்.


இக் கலந்துரையாடலுக்கு வருகை தந்த அமைச்சர், யாழ்ப்பாண மாவட்ட பாராளுமன்ற உறுப்பினர் உள்ளிட்டவர்களை வரவேற்ற அரசாங்க அதிபர், யாழ்ப்பாண மாவட்டத்தில் சிறுவர் இல்லங்களில் வாழ்ந்த 34 பேரும், பாதுகாப்பற்ற சூழ்நிலையிலுள்ள 15 சிறுவர்களுக்கும் என மொத்தம் 49 வீடுகள் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாக  தெரிவித்தார்.


மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சர் சரோஜா சாவித்திரி போல் ராஜ் யாழ்ப்பாண மாவட்டத்தின் அபிவிருத்தி மற்றும் மகளிர், சிறுவர் நலன்சார் செயற்பாடுகளில் அர்ப்பணிப்புடன் பணியாற்றும் மாவட்ட, பிரதேச மட்ட உத்தியோகத்தர்களையும் பாராட்டினார்.


மேலும், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் பிரதேச மட்டத் தலைவர்களின் வழிகாட்டலிலும் ஒத்துழைப்பிலும் மாவட்டத்தின் பல்வேறு அபிவிருத்திச் செயற்பாடுகள் முன்னெடுக்கப்பட்டு வருகின்றன. குறிப்பாக, பாராளுமன்ற உறுப்பினர் கருணைராஜா இளங்குமரன் உள்ளிட்ட மக்கள் பிரதிநிதிகளின் பங்களிப்பையும் அவர் பாராட்டி நன்றி தெரிவித்தார்.


மேலும், அமைச்சர், பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அரச உத்தியோகத்தர்களின் ஒருங்கிணைந்த ஒத்துழைப்புடன் 2027 ஆம் ஆண்டில் மாவட்டத்தை மேலும் வளர்ச்சியடையச் செய்ய அனைவரும் இணைந்து செயற்பட வேண்டும் எனவும் தெரிவித்தார்.


இக்கூட்டத்தில் முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி, பெண்களின் வாழ்வாதார மேம்பாடு, வீட்டுத் திட்டங்கள் உள்ளிட்ட பல்வேறு துறைகளில் நிதி ஒதுக்கீட்டின் ஊடாக முன்னெடுக்கப்பட்டு வரும் அபிவிருத்தித் திட்டங்கள் தொடர்பான முன்னேற்ற அறிக்கைகள், யாழ்ப்பாண மாவட்ட உதவி அரசாங்க அதிபர் உ. தர்ஷினி விளக்கக்காட்சியின் ஊடாக முன்வைக்கப்பட்டன.


இதன்போது ஒவ்வொரு திட்டங்களினதும் தற்போதைய முன்னேற்றம், நடைமுறைப்படுத்தலில் எதிர்கொள்ளப்படும் சவால்கள் மற்றும் எதிர்கால நடவடிக்கைகள் தொடர்பில் விரிவாக ஆராய்ந்த அமைச்சர், திட்டங்களை வினைத்திறனுடனும் உரிய காலப்பகுதியிலும் நடைமுறைப்படுத்துவதற்குத் தேவையான அறிவுறுத்தல்களையும் வழிகாட்டல்களையும் சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு வழங்கினார்.


இக் கலந்துரையாடலில் மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் கீழ் யாழ்ப்பாண மாவட்டத்திலுள்ள பிரதேச செயலகங்களில் பணியாற்றும் பெண்கள் அபிவிருத்தி உத்தியோகத்தர்கள், ஆலோசனை உதவியாளர்கள், முன்பிள்ளைப் பருவ அபிவிருத்தி உதவியாளர்கள், சிறுவர் உரிமைகள் மேம்பாட்டு உத்தியோகத்தர்கள், சிறுவர் பாதுகாப்பு உத்தியோகத்தர்கள், உளவளத் துணை உத்தியோகத்தர்கள் மற்றும் நன்னடத்தை உத்தியோகத்தர்கள் உள்ளிட்ட கள உத்தியோகத்தர்களும்  பங்கேற்றனர்

Share this Article
Leave a comment