தமிழ்த்தேசியப் பசுமை இயக்கத்தின் ‘கார்த்திகை வாசம்’ மலர்க்கண்காட்சி நேற்று சனிக்கிழமை (21.11) நல்லூர் கிட்டு பூங்காவில் கார்த்திகைப் பூச்சூடி கோலாகலமாக ஆரம்பமாகியுள்ளது.

இவ்விழாவில் பிரதம விருந்தினராக யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் மேனாள் துணைவேந்தர் பேராசிரியர் நா.சண்முகலிங்கன், கௌரவ விருந்தினராக இந்திய நாடாளுமன்ற உறுப்பினரும், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் தலைவருமான முனைவர் தொல். திருமாவளவன், சிறப்பு விருந்தினராக இந்திய வணிக மேம்பாட்டுக் கழகத்தின் தலைவர் ஆர்.ஆர்.தமிழ்ச்செல்வன் ஆகியோர் கலந்து கொண்டிருந்தார்கள்.
பசுமை இயக்கத்தின் சூழலியல் ஆலோசகர் கா.சோ.சிவநேசன் தலைமையில் நடைபெற்ற இவ்விழாவில் பசுமை இயக்கத்தின் தலைவர் பொ. ஐங்கரநேசன் தொடக்க உரையாற்ற, அரசியல் ஆய்வாளர் நிலாந்தன் சிறப்புரை ஆற்றியிருந்தார்.
பசுமை இயக்கத்தின் கலை இலக்கிய அணியின் துணைச் செயலாளர் கை. சரவணன் வரவேற்புரை ஆற்றிய இந்நிகழ்ச்சியில் சாரங்கி வேல்மாறன் தமிழ்த் தாய் வாழ்த்திசைத்தார். மாவீரர்கள் வெற்றி, கோநிலவன், புதியவன் ஆகியோரின் கசோதரி தயாநிதி நந்தகுமார் ஈகைச்சுடரை ஏற்றிவைத்தார். விழாவில் முன்னதாக இசைக் கலைஞர் பூவன் மதீசனின் எழுச்சிப் பாடல்களும் இடம் பெற்றன.
கண்காட்சித் திடல் நிறைந்த சனத்திரளுடன் இடம்பெற்ற இவ்விழாவில் நீர்வேலி பொன்சக்தி கலாகேந்திரா குழுவினரின் நாட்டிய நடன நிகழ்ச்சிகளும் இடம் பெற்றிருந்தது. இந் நிகழ்ச்சியில் 100 மாணவர்களுக்குத் துவிச்சக்கரவண்டிகளும் வழங்கி வைக்கப்பட்டன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் தாவர உற்பத்தியாளர்களுடன் இணைந்து நடாத்தும் இம் மலர்க்கண்காட்சி எதிர்வரும் 28ஆம் திகதி வரை தினமும் காலை 8.30 மணி தொடக்கம் இரவு 7.30 மணிவரை நடைபெறவுள்ளது. இக்கண்காட்சியைப் பார்வையிடும் மாணவர்களுக்கு இலவசமாக மரக்கன்றுகள் வழங்கப்படுகின்றன.
தமிழ்த்தேசியப் பசுமை இயக்கம் வடமாகாண மரநடுகை மாதத்தை முன்னிட்டு பொதுமக்கள் மரக்கன்றுகளை இலகுவாகப் பெற்றுக்கொள்ளும் நோக்கில் ஆண்டுதோறும் இக்கண்காட்சியை நடாத்தி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.