முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தலைமையிலான ஸ்ரீ லங்கா பொதுஜன பெரமுன கட்சி, முழுமையாக நீதிமன்றங்களிலும் சிறைச்சாலைகளிலும் சிக்கியுள்ளனர் என்று அகில இலங்கை சிறு மற்றும் நடுத்தர கைத்தொழில் சங்கத்தின் தலைவர் நிருக்ஷ குமார தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பின்போதே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டுள்ளார்.
தொடர்ந்தும் தெரிவிக்கையில்,
இந்த நாட்டின் எதிர்க்கட்சிகள் அனைத்தும், தங்களுடைய உட்கட்சிப் பிரச்சினைகளை தீர்த்துக் கொள்வதிலேயே அதிகமாக கவனம் செலுத்துகின்றன.
இந்த நாட்டிலுள்ள மக்களின் கைகளுக்குச் சென்றடையக்கூடிய வலுவான பொருளாதார வேலைத்திட்டத்தையும், வலுவான அரசியல் வேலைத்திட்டத்தையும் உருவாக்குவதற்கு எதிர்க்கட்சியைச் சேர்ந்த அனைத்து அரசியல் தலைவர்களும் தோல்வியடைந்துள்ளனர்.
எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தலைமையிலான அணி பாரிய நெருக்கடிக்கு முகம் கொடுத்துள்ளது. அந்தக் கட்சிக்குள் சஜித் பிரேமதாச ஒரு பக்கத்திலும், ஹர்ஷ டி சில்வா மற்றொரு பக்கத்திலும் இருப்பதுடன், பல்வேறு குழுக்கள், வெவ்வேறு கருத்துக்களுடன் செயற்பட்டு வருகின்றன.
அதேபோன்று, ஐக்கிய மக்கள் சக்தியில் அங்கம் வகித்த மனோ கணேசன், திகாம்பரம், ரவூப் ஹக்கீம் ஆகியோர் இன்று அந்தக் கட்சியில் இல்லை.
பொதுஜன பெரமுனவை எடுத்துக்கொண்டால், அந்தக் கட்சியினர் நீதிமன்றங்களிலும், சிறைச்சாலைகளிலும் தங்களுடைய பிரச்சினைகளுடன் சிக்கியுள்ளனர்.
ஸ்ரீ லங்கா சுதந்திரக் கட்சியைப் பொறுத்தவரையிலும், அந்தக் கட்சியும் அதன் செயற்பாடுகளும் நீதிமன்றப் பிரச்சினைகளுக்குள் சிக்கியுள்ளன. ஐக்கிய தேசியக் கட்சியும் இதுபோன்ற நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது.
இவ்வாறான சூழலில், இந்தக் கட்சிகள் அனைத்தும் தங்களுடைய உட்கட்சிப் பிரச்சினைகளைத் தீர்த்துக் கொள்வதிலேயே கவனம் செலுத்துகின்றன.
இதற்கு அப்பால், மக்களிடம் முன்வைப்பதற்கான மாற்றுப் பொருளாதாரக் கொள்கையையோ, அரசியல் நோக்கையோ உருவாக்கி வெளிப்படுத்துவதற்கு அவை தோல்வியடைந்துள்ளன என குறிப்பிட்டுள்ளார்