அரச நிறுவனங்களை இணைக்கும் நடவடிக்கை ஆரம்பம் !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரச நிறுவனங்களின் வினைத்திறனை அதிகரிக்கும் நோக்கில், அரச நிறுவனங்களை இணைக்கும் முதலாவது நடவடிக்கையை அரசாங்கம் உத்தியோகபூர்வமாக ஆரம்பித்துள்ளது.

இதற்கமைய, இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் கலைக்கப்பட்டு, தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபையின் கீழ் கொண்டுவரப்பட்டுள்ளது.

அமைச்சரவை அங்கீகாரத்துடன், அமைச்சர் சுனில் ஹந்துன்நெத்தியினால் நவம்பர் 5 ஆம் திகதி வெளியிடப்பட்ட 2513/35 ஆம் இலக்க அதிவிசேட வர்த்தமானி அறிவித்தல் ஊடாக இந்த இணைப்பு நடைமுறைப்படுத்தப்பட்டுள்ளது.

பொது வளங்களைச் சிறப்பாகப் பயன்படுத்துதல் மற்றும் பொறுப்புகள் மீண்டும் மீண்டும் ஏற்படுவதைத் தவிர்த்தல் ஆகிய நோக்கங்களுக்காக இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளதாகக் கைத்தொழில் மற்றும் தொழில்முயற்சியாண்மை அபிவிருத்தி அமைச்சு தெரிவித்துள்ளது.

இதன்படி, 1995 ஆம் ஆண்டு ஸ்தாபிக்கப்பட்ட இரத்தினக்கல் மற்றும் ஆபரண ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனத்தின் சகல சொத்துக்கள், பொறுப்புகள், ஒப்பந்தங்கள் மற்றும் சட்ட நடவடிக்கைகள் தேசிய இரத்தினக்கல் மற்றும் ஆபரண அதிகாரசபைக்கு மாற்றப்படுகின்றன.

இந்நிறுவனத்தின் சகல ஊழியர்களும் எவ்வித பாதிப்புமின்றி தமது தொழில் மற்றும் ஓய்வூதியச் சலுகைகளுடன் அதிகாரசபையின் ஊழியர்களாகத் தொடர்ந்தும் பணியாற்றுவார்கள் என அமைச்சு உறுதிப்படுத்தியுள்ளது.

அத்துடன், தற்போது முன்னெடுக்கப்பட்டு வரும் சகல கற்கைநெறிகள், பரீட்சைகள் மற்றும் ஆராய்ச்சித் திட்டங்கள் தடையின்றித் தொடரும் எனவும், மாணவர்களின் உரிமைகள் பாதுகாக்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

இந்த மறுசீரமைப்பின் மூலம் இரத்தினக்கல் மற்றும் ஆபரணத் துறையின் ஒழுங்குபடுத்தல், ஆராய்ச்சி மற்றும் பயிற்சி ஆகியவற்றை ஒரே கட்டமைப்பின் கீழ் கொண்டுவந்து, ஏற்றுமதி ஊக்குவிப்பையும் துறையின் அபிவிருத்தியையும் வலுப்படுத்த எதிர்பார்க்கப்படுவதாக அமைச்சு மேலும் குறிப்பிட்டுள்ளது.

Share this Article
Leave a comment