கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்த WORLD ODYSSEY கப்பல்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பெர்முடா நாட்டின் கொடியின் கீழ் பயணிக்கும் WORLD ODYSSEY பயணிகள் கப்பல் 524 பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்களுடன் கொழும்புத் துறைமுகத்தை வந்தடைந்துள்ளது.

இந்தக் கப்பலில் பயணிகளாகப் பல்கலைக்கழகங்களில் கல்வி பயிலும் மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் வருகை தந்துள்ளமை குறிப்பிடத்தக்க அம்சமாகும்.

குறித்த கப்பலில் 524 மாணவர்கள் மற்றும் கல்விப் பணியாளர்கள் வருகை தந்துள்ளதுடன், கப்பலின் பணியாளர்களாக 181 பேர் உள்ளனர்.

இவர்களில் பெரும்பாலான மாணவர்கள் கண்டி மற்றும் தென் மாகாணத்திலுள்ள சுற்றுலாத் தலங்களுக்குச் சென்றுள்ளதுடன், ஏனைய மாணவர் குழுக்கள் கொழும்பு நகரில் சுற்றுப்பயணங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.

மேலும், கப்பல் கடலில் பயணிக்கும் சந்தர்ப்பங்களிலும் கல்வி நடவடிக்கைகள் தொடர்ந்து முன்னெடுக்கப்படுகின்றமை இதன் மற்றுமொரு சிறப்பம்சமாகும். இதன்போது விரிவுரையாளர்கள் வகுப்புகளை நடத்துவதுடன், மாணவர்களும் தமது கல்வி நடவடிக்கைகளைத் தொடர்ந்து வருகின்றனர்.

இந்தக் கப்பல் எதிர்வரும் 23ஆம் திகதி வரை கொழும்புத் துறைமுகத்தில் நங்கூரமிடப்பட்டிருக்கும் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதற்கிடையில், மாணவர் குழுக்கள் இலங்கையிலுள்ள பல்கலைக்கழகங்கள் சிலவற்றுக்கும் விஜயம் செய்வதற்கான ஏற்பாடுகள் மேற்கொள்ளப்பட்டுள்ளன.

இந்தப் பயணிகள் அனைவரும் சுற்றுலா விசாக்களின் அடிப்படையில் இலங்கைக்கு வருகை தந்துள்ளதால், நாட்டுக்கு அந்நியச் செலாவணி வருமானம் கிடைப்பதுடன், ஹோட்டல்கள், போக்குவரத்துச் சேவைகள் மற்றும் ஏனைய சுற்றுலாத்துறை சார்ந்த வர்த்தக நிறுவனங்களுக்கும் பொருளாதார நன்மைகள் கிடைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது

Share this Article
Leave a comment