சம்பள முரண்பாடுகளுக்கு தீர்வு கோரி ஆசிரியர், அதிபர்கள் ஒருநாள் வேலைநிறுத்தப் போராட்டம் !

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

அரசாங்கத்தினால் சமர்ப்பிக்கப்பட்டுள்ள வரவு செலவுத் திட்டத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர்களின் சம்பள முரண்பாடுகளை நீக்குவது தொடர்பாக எவ்விதக் குறிப்பும் மேற்கொள்ளப்படாத நிலையில், தெற்காசியாவிலேயே மிகக் குறைந்த சம்பளத்தைப் பெறும் இலங்கை, ஆசிரியர்களின் உரிமைகளை வென்றெடுப்பதற்காக ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்தில் ஈடுபடவுள்ளதாக ஆசிரியர் – அதிபர் தொழிற்சங்கங் கூட்டமைப்பு எச்சரிக்கை விடுத்துள்ளன.

இது குறித்து இலங்கை ஆசிரியர் சங்கத்தின் பொதுச்செயலாளர் ஜோசப் ஸ்டாலின் கருத்துத் தெரிவிக்கையில்,

ஏற்கனவே சுபோதினி ஆணைக்குழுவினால் பரிந்துரைக்கப்பட்ட சம்பள முரண்பாட்டுத் தீர்வின் எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கைப் பெற்றுக்கொள்வதற்காக முன்னெடுக்கப்பட்ட தொடர் போராட்டங்களின் விளைவாக, அமைச்சுசார் குழுவினால் 2021ஆம் ஆண்டு முதல் அதன் ஒரு பகுதி வழங்கப்பட்டது. இருப்பினும், எஞ்சிய நிலுவைகளை நடப்பு வரவு செலவுத் திட்டத்தில் வழங்குவது குறித்து புதிய அரசாங்கம் அமைதி காத்து வருகிறது.

சம்பள முரண்பாடுகள் மற்றும் ஏனைய கோரிக்கைகள் தொடர்பில் தற்போதைய வரவு செலவுத் திட்டக் குழுநிலை விவாதத்தின் போதாவது அரசாங்கம் சாதகமான திருத்தங்களை மேற்கொள்ள வேண்டும் எனத் தொழிற்சங்கங்கள் வலியுறுத்தியுள்ளன. இருப்பினும், தொழிற்சங்கங்களின் கோரிக்கைகளை இப்போதைக்கு நிறைவேற்ற முடியாது என்றும், அடுத்த வரவு செலவுத் திட்டம் வரையில் காத்திருக்க வேண்டும் என்றும் அமைச்சரவைப் பேச்சாளர் நளிந்த ஜயதிஸ்ஸ தெரிவித்துள்ளார்.

மக்கள் வாக்களித்துத் தேர்ந்தெடுத்த அரசாங்கம் மக்களின் நியாயமான கோரிக்கைகளைப் புறக்கணித்துத் தன்னிச்சையாகச் செயற்படக் கூடாது. அவ்வாறு செயற்பட்ட கடந்தகால அரசாங்கங்களைப் பொதுமக்கள் போராட்டங்கள் மூலம் வீட்டிற்கு அனுப்பிய வரலாற்றுப் பாடத்தை அரசாங்கம் நினைவில் கொள்ள வேண்டும்.

இதேவேளை, பாடசாலை மாணவர்களுக்கான மதிய உணவு மற்றும் ஊட்டச்சத்துத் திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீடுகள் இம்முறை வரவு செலவுத் திட்டத்தில் கடந்த ஆண்டை விடக் குறைக்கப்பட்டுள்ளதுடன், 1.5 மில்லியன் மாணவர்களாக உள்ள பயனாளிகளின் எண்ணிக்கையை அதிகரிக்குமாறு விடுக்கப்பட்ட கோரிக்கையும் நிராகரிக்கப்பட்டுள்ளது.

ஒரு மாணவருக்கான ஊட்டச்சத்துத் திட்டத்திற்கு 100 ரூபா மட்டுமே ஒதுக்கப்பட்டிருப்பது முற்றிலும் போதுமானதல்ல. அத்துடன், மொத்த உள்நாட்டு உற்பத்தியில் கல்விக்காக 1.9 சதவீதம் என்ற மிகக் குறைந்தளவிலான நிதியே ஒதுக்கப்பட்டுள்ளது.

மேலும், அரசப் பல்கலைக்கழகங்களில் கல்வியியல் பட்டப்படிப்பை முடித்த பட்டதாரிகளுக்கு ஆசிரியர் நியமனங்களை வழங்காமல், தனியார் பல்கலைக்கழகப் பட்டதாரிகளுக்கும் ஆசிரியர் நியமனங்களை வழங்கும் வகையில் விடுக்கப்பட்ட வர்த்தமானி அறிவித்தல்கள் மூலம் இலவசக் கல்வி முறைமை கட்டாயப்படுத்தித் தனியார்மயமாக்கப்பட்டு வருகிறது.

கல்வி மறுசீரமைப்புகள் தொடர்பில் ஆசிரியர்களுக்கு நடத்தப்படும் பயிற்சிகள் உரிய பாடத்தொகுதிகள் இன்றி முழுமையின்றி முன்னெடுக்கப்பட்டு வருகிறது.

தற்போதைய பாராளுமன்றத்தில் ஆசிரியர் மற்றும் அதிபர் தொழிற்சங்கப் பின்னணியைக் கொண்ட 23 பாராளுமன்ற உறுப்பினர்கள் அங்கத்துவம் வகிப்பதுடன், மஹிந்த ஜயசிங்க தலைமையிலான இலங்கை ஆசிரியர் சேவை சங்கம் உட்பட அனைத்துத் தொழிற்சங்கங்களும் இணைந்து முன்னெடுத்த போராட்டங்களின் மூலமே இவர்கள் பாராளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ளனர் என்பதை நினைவில் கொள்ள வேண்டும்.

எனவே, இப்பாராளுமன்றப் பிரதிநிதிகள் தங்களது பொறுப்பை உணர்ந்து ஆசிரியர்கள் மற்றும் மாணவர்களின் உரிமைகளுக்காகக் குரல்கொடுக்க வேண்டும் எனவும், தவறும் பட்சத்தில் அனைத்துத் தொழிற்சங்கங்களையும் ஒன்றிணைத்து ஒரு நாள் அடையாள வேலைநிறுத்தப் போராட்டத்திற்கான திகதி விரைவில் அறிவிக்கப்படும் என்றார்

Share this Article
Leave a comment