யாழ்ப்பாணத்தில் நீரிழிவு நோயின் தாக்கம் அதிகரிப்பு!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

யாழ்ப்பாண மாவட்டத்தில் நீரிழிவு  நோயின் தாக்கம் அதிகரித்து வருவதாகச் சுட்டிக்காட்டியுள்ள யாழ்ப்பாணப் பல்கலைக்கழக வைத்திய பீடாதிபதி பேராசிரியர் சுரேந்திரகுமரன், இந்நோயைக் கட்டுப்படுத்துவதற்கு சமூகத்தின் அனைத்துத் தரப்பினரும் ஒன்றிணைந்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ளார்.

உலக நீரிழிவு தினத்தை முன்னிட்டு யாழ். மாவட்ட நீரிழிவு கழகத்தின் ஏற்பாட்டில் யாழ்ப்பாணத்தில் நடைபெற்ற விழிப்புணர்வு மருத்துவ முகாம் நிகழ்வை இன்று (14/11) பிரதி மாகாண சுகாதார சேவைகள் பணிப்பாளர் மு.உமாசங்கருடன்
அதிதியாக கலந்து சிறப்பித்து சம்பிரதாயபூர்வமாக ஆரம்பித்து வைத்த பின்னர் மேற்கண்டவாறு தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்,

கடந்த பத்து ஆண்டுகால சேவைகளைப் பாராட்டிய அவர், மைக்கல் தலைமையில் குறித்த கழகம் நீரிழிவு நோயாளர்களுக்கான வைத்தியப் பரிசோதனைகள் மற்றும் விழிப்புணர்வு நிகழ்ச்சிகளைப் பல்வேறு பகுதிகளில் தொடர்ச்சியாக முன்னெடுத்து வருவது வரவேற்கத்தக்கது எனத் தெரிவித்துள்ளார்.

மேலும் நீரிழிவு நோய் உலகளாவிய ரீதியில் பாரிய சுகாதாரப் பிரச்சினையாக உருவெடுத்துள்ளதுடன், எமது சமூகத்திலும் அதன் தாக்கம் அதிகரித்து வருகின்றது.

இது ஆரம்பத்தில் வெளிப்படையான அறிகுறிகள் இன்றி உடலின் முக்கிய உறுப்புகளைப் பாதிக்கக்கூடிய நோயாக இருப்பதால், ‘மௌனக் கொல்லி’யாக உருவெடுக்கின்றது எனவும் அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

மேலும், இலங்கையில் நீரிழிவு நோயின் பரவல் கடந்த காலங்களுடன் ஒப்பிடுகையில் கணிசமாக அதிகரித்துள்ளதாகவும், ஆய்வுகளின் அடிப்படையில் கடந்த 10 ஆண்டுகளுக்கு முன்னர் 3 முதல் நான்கு வீதமாக இருந்த இந்நோய் தற்போது 30 முதல் 40 சதவீதம் வரையான அதிகரிப்பு பதிவாகியுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

அந்த வகையில், யாழ்ப்பாண மாவட்டத்தின் சுமார் ஆறு இலட்சம் மக்கள் தொகையில் இரண்டு இலட்சம் பேர் வரையில் நீரிழிவு நோயால் பாதிக்கப்பட்டிருக்கலாம் எனவும் அவர்  தெரிவித்துள்ளார்.

இந்த நோயைக் கட்டுப்படுத்துவதற்கு வைத்தியர்கள் மற்றும் சுகாதாரப் பணியாளர்களின் முயற்சிகள் மாத்திரம் போதுமானதல்ல.

சமூக அமைப்புகள், உள்ளூராட்சி மன்றங்கள் உள்ளிட்ட அனைத்துத் தரப்பினரும் ஒருங்கிணைந்து செயற்பட வேண்டியது அவசியம். அப்போதுதான் எதிர்காலச் சந்ததியினரை நீரிழிவு நோயின் பாதிப்பிலிருந்து பாதுகாக்க முடியும் என அவர் வலியுறுத்தியுள்ளார்.

அதேவேளை, நீரிழிவு நோய் தொடர்பான விழிப்புணர்வுத் தகவல்களை மக்களுக்கு வழங்குவதுடன் நின்றுவிடாமல், மக்கள் தமது அன்றாட வாழ்க்கை முறையிலும் மாற்றங்களை ஏற்படுத்திக்கொள்ள வேண்டும் எனவும் அவர் கேட்டுக்கொண்டுள்ளார்.

குறிப்பாக, சீனி மற்றும் மாச்சத்து அதிகமுள்ள உணவுகளின் அளவைக் கட்டுப்படுத்துதல், சீரான உணவுப் பழக்கத்தைப் பின்பற்றுதல், தினசரி உடற்பயிற்சிகளில் ஈடுபடுதல் போன்றவற்றின் மூலம் நீரிழிவு நோயைக் கட்டுப்படுத்துவதற்கான நடவடிக்கைகளை முன்னெடுக்க முடியும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மேலும், மக்கள் உடற்பயிற்சியில் ஈடுபடுவதற்குத் தேவையான நடைபாதைகள், விளையாட்டு மைதானங்கள் மற்றும் ஏனைய உடற்பயிற்சி வசதிகளை உள்ளூராட்சி மன்றங்கள் மேம்படுத்தி வழங்க வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.

நீரிழிவு நோயைத் தடுப்பதும் கட்டுப்படுத்துவதும் தனிநபர்களின் பொறுப்பு மட்டுமல்ல, அது ஒட்டுமொத்த சமூகத்தின் கூட்டுப் பொறுப்பாகும் என்பதையும் அவர்  வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

Share this Article
Leave a comment