கடற்படை முகாமிலிருந்து திருடப்பட்ட துப்பாக்கி மயானத்தில் மீட்பு!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

கல்பிட்டி விஜய கடற்படை முகாமிலுள்ள டோரா ரோந்துப் படகில் இருந்து திருடப்பட்ட துப்பாக்கியொன்று, தெற்கின் பாதாள உலகக் குழுவொன்றுக்கு 18 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய முயற்சிக்கப்பட்ட சம்பவம் தொடர்பில் கடற்படைச் சிப்பாய் உள்ளிட்ட மூவர் கைது செய்யப்பட்டுள்ளனர்.

குறித்த துப்பாக்கி, நவம்பர் 09ஆம் திகதி ரணால பகுதியில் அமைந்துள்ள மயானமொன்றில் மறைத்து வைக்கப்பட்டிருந்த நிலையில், குற்றப் புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகளால் மீட்கப்பட்டுள்ளதாகத் தெரிவிக்கப்படுகிறது.

கல்பிட்டி விஜய கடற்படை முகாமின்

கடந்த நவம்பர் 07ஆம் திகதி, எவருக்கும் சந்தேகம் ஏற்படாத வகையில் துப்பாக்கியை முகாமிலிருந்து இரகசியமாக எடுத்துச் சென்று, முகாமுக்கு முன்னால் நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் வாகனமொன்றில் இருந்த நபர்களிடம் ஒப்படைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகக் கூறப்படுகிறது.

குறித்த துப்பாக்கியை தெற்குப்  பகுதியைச் சேர்ந்த பாதாள உலகக் குழுவொன்றுக்கு 18 இலட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்வதற்காகத் தனது நண்பர்கள் இருவரிடம் கடற்படைச் சிப்பாய் ஒப்படைத்துள்ளதாக விசாரணைகளில் தெரியவந்ததாகச் செய்தி வெளியாகியுள்ளது.

குறித்த துப்பாக்கி காணாமல் போனமை தொடர்பில் கல்பிட்டி விஜய கடற்படை முகாமின் ஒழுக்காற்றுப் பிரிவின் பொறுப்பதிகாரி, புத்தளம் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகரிடம் முறைப்பாடு செய்துள்ளார்.

இதனையடுத்து, ஆரம்ப விசாரணைகள் மாவட்ட குற்றப் புலனாய்வுப் பிரிவிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளன. சந்தேகத்தின் பேரில் கடற்படைச் சிப்பாய் கைது செய்யப்பட்டு விசாரணைக்கு உட்படுத்தப்பட்ட பின்னர், மேலதிக விசாரணைகளுக்காக குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திடம் ஒப்படைக்கப்பட்டுள்ளார்.

தற்போது கைது செய்யப்பட்டுள்ள கடற்படைச் சிப்பாய் உள்ளிட்ட மூவரையும் மேலதிக விசாரணைகளுக்காகத் தடுத்து வைத்து விசாரிப்பதற்கு நீதிமன்ற உத்தரவு பெறப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது.

Share this Article
Leave a comment