இலங்கையின் நீர் வழங்கல் மற்றும் சுகாதாரத் திட்டங்களுக்கு நிதியுதவி!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கை முழுவதும் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சேவைகளை விரிவுபடுத்தி வலுப்படுத்தும் நோக்கில், இரண்டு முக்கிய திட்டங்களுக்காக 300 மில்லியன் டொலர் நிதியுதவியை வழங்க ஆசிய அபிவிருத்தி வங்கி இணக்கம் தெரிவித்துள்ளது.

ஆசிய அபிவிருத்தி வங்கி வெளியிட்டுள்ள தகவல்களுக்கமைய, இந்த நிதியுதவியில் 200 மில்லியன் டொலர் காலநிலை மாற்றத்தை தாங்கக்கூடிய நிலையான நீர் வழங்கல் மற்றும் சுகாதார திட்டத்துக்கு ஒதுக்கப்பட்டுள்ளது.

இதன் மூலம் மேல் மற்றும் தென் மாகாணங்களில் உள்ள 1.3 மில்லியனுக்கும் அதிகமான மக்கள் பாதுகாப்பான மற்றும் நம்பகமான குடிநீர் வசதியைப் பெறுவர்.

அத்துடன் வட மாகாணத்தின் யாழ்ப்பாணத்தில் உள்ள சுமார் 250,000 மக்களின் கழிவுநீர் முகாமைத்துவம் மற்றும் சுகாதார சேவைகளும் மேம்படுத்தப்படவுள்ளன.

இத்திட்டத்தின் கீழ், கொழும்பு மற்றும் லுணுகம்வெஹெர ஆகிய பகுதிகளில் காலநிலை மாற்றத்துக்கு தாக்குப் பிடிக்கக்கூடிய புதிய நீர் சுத்திகரிப்பு நிலையங்கள், விநியோகக் கட்டமைப்புகள் மற்றும் சேமிப்பு நீர்த்தேக்கங்கள் அமைக்கப்படவுள்ளன.

யாழ்ப்பாணத்தில் கழிவுநீர் சுத்திகரிப்பு வசதிகள், கழிவுநீர் குழாய் அமைப்புகள் மற்றும் நீரேற்று நிலையங்கள் உருவாக்கப்படவுள்ளன. நீர் விரையத்தைக் குறைத்தல், புதுப்பிக்கத்தக்க ஆற்றல் பயன்பாட்டை ஊக்குவித்தல், தேசிய நீர் வழங்கல் மற்றும் வடிகாலமைப்புச் சபையை பலப்படுத்துதல் மற்றும் நீர்த்துறையில் தனியார் துறை பங்களிப்பை அதிகரித்தல் ஆகியவை இத்திட்டத்தின் முக்கிய நோக்கங்களாகும்.

அதேவேளை, மீதமுள்ள 100 மில்லியன் டொலர்கள் நீர் வழங்கல் மற்றும் சுகாதார சீர்திருத்த திட்டத்தின் இரண்டாவது உப-நிகழ்ச்சித்திட்டத்திற்காக ஒதுக்கப்பட்டுள்ளது. இது நீர்த்துறை ஆளுகையை வலுப்படுத்துதல், சேவை விநியோகத்தை மேம்படுத்துதல் மற்றும் தனியார் துறை முதலீடுகளை ஈர்ப்பதில் கவனம் செலுத்துகிறது. அத்துடன் நீர் வள மேலாண்மை, சுகாதாரம், காலநிலை மீள்தன்மை, நீர் கட்டணங்கள் மற்றும் தேசிய நீர் வழங்கல் வடிகாலமைப்பு சபையின் நிதி நிலைத்தன்மை சார்ந்த சீர்திருத்தங்களுக்கும் இந்நிகழ்ச்சித்திட்டம் ஆதரவளிக்கும்.

இது தொடர்பாக கருத்து தெரிவித்துள்ள ஆசிய அபிவிருத்தி வங்கியின் இலங்கைக்கான பணிப்பாளர் ஷானன் கவ்லின், ‘பொதுச்சுகாதாரம் மற்றும் பொருளாதார வளர்ச்சிக்கு பாதுகாப்பான, நம்பகமான மற்றும் நிலையான நீர் மற்றும் சுகாதார சேவைகள் இன்றியமையாதவை. நாட்டின் நீர்த்துறை ஆளுகையை வலுப்படுத்தவும், நிறுவனங்களின் நிதி நிலைத்தன்மையை அதிகரிக்கவும் இலங்கை எடுக்கும் முயற்சிகளுக்கு இத்திட்டங்கள் பெருமளவில் உதவும்,’ எனக் குறிப்பிட்டுள்ளார்.

இந்த முதலீடுகள் மற்றும் சீர்திருத்தங்கள் மூலம் இலங்கை மக்களுக்கு மிகவும் பாதுகாப்பான மற்றும் காலநிலை மீள்தன்மை கொண்ட குடிநீர் மற்றும் சுகாதார சேவைகள் கிடைக்கப்பெறும் என ஆசிய அபிவிருத்தி வங்கி நம்பிக்கை தெரிவித்துள்ளது.

Share this Article
Leave a comment