விமானி இல்லாத ட்ரோனில் பயணித்த அமைச்சர்கள்!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

இலங்கையின் முதலாவது மின்சார, விமானி இல்லாத பயணிகள் ட்ரோன் விமான சோதனை இன்று (11/11)  கொழும்பு துறைமுக நகரில் இடம்பெற்றுள்ளது.

இந்த புதிய தொழில்நுட்ப விமானத்தில் முதலாவது பயணிகளாக அமைச்சர் அநுர கருணாதிலக  மற்றும் பிரதி அமைச்சர் ஜனித றுவான் கொடிதுவக்கு ஆகியோர் பயணித்துள்ளனர்.

சீனாவின் EHang நிறுவனத்தால் தயாரிக்கப்பட்ட EH216-S ரக மின்சார விமானம் இந்த சோதனைக்கு பயன்படுத்தப்பட்டது.

இரண்டு பயணிகளை ஏற்றி செல்ல கூடிய இந்த விமானம், விமானி இன்றி தானியங்கி முறையிலும் தொலைவில் இருந்து கட்டுப்படுத்தும் முறையிலும் இயக்க கூடிய தொழில்நுட்பத்தை கொண்டுள்ளது.

ஓடுபாதை இல்லாமலேயே செங்குத்தாக மேலெழும்பி தரையிறங்க கூடிய இந்த வகை விமானங்கள், எதிர்காலத்தில் நகர் புற போக்குவரத்து மற்றும் சுற்றுலா துறையில் புதிய வாய்ப்புகளை உருவாக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இலங்கையின் விமான போக்குவரத்துத துறையில் புதிய தொழில்நுட்பத்தை அறிமுகப்படுத்தும் முயற்சியாக இந்த சோதனை பயணம் அமைந்துள்ளது.

16 சுழலிகள், 12 மின்கலத் தொகுப்புகள் மற்றும் மூன்று விமானக் கட்டுப்பாட்டு அமைப்புகளைக் கொண்ட இந்த ட்ரோன் விமானம், கணினி அமைப்பின் மூலம் முழுமையாகக் கட்டுப்படுத்தப்படுகிறது.

 மேலும், ஒரே கட்டுப்பாட்டு மையத்தில் இருந்து தொலைதூரத்தில் இயக்கக்கூடிய சாத்தியக்கூறு இருப்பதுடன், ஏதேனும் அவசர விபத்து அல்லது தகவல் தொடர்பில் தடங்கல் ஏற்பட்டால், தானாகவே பாதுகாப்பான நடவடிக்கை முறைகளுக்கு மாறும் தொழில்நுட்ப வசதியும் இதில் அடங்கியுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

 இத்திட்டத்தை நடைமுறைப்படுத்துவதற்கு சிவில் விமான போக்குவரத்து அதிகாரசபை, பாதுகாப்பு அமைச்சு, விமானப்படை உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் ஒருங்கிணைப்பும் அவசியமாகிறது.

 எதிர்காலத்தில் இந்த பயணிகள் ட்ரோன் சேவையை இயக்குவதன் மூலம் சீகிரியா, பிதுரங்கலை மற்றும் தீவுகளைச் சார்ந்த சுற்றுலாத் தலங்களுக்கு வான்வழியாகச் சுற்றுலாப் பயணிகளை அழைத்துச் செல்வதற்கான புதிய வாய்ப்புகளை உருவாக்க முடியும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. 

 

Share this Article
Leave a comment