9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதி செலவு 4,400 டொலர்!!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இந்த ஆண்டின் ஜனவரி முதல் செப்டம்பர் வரையிலான கடந்த 9 மாத காலத்தில், இலங்கையின் எரிபொருள் இறக்குமதிச் செலவு 4,400 மில்லியன் அமெரிக்க டொலர்களைத் தாண்டியுள்ளது.

இதற்கமைய, குறிப்பிடப்பட்ட காலத்தில் எரிபொருள் இறக்குமதிக்காக செலவிடப்பட்ட மொத்தத் தொகை 4,487.2 மில்லியன் அமெரிக்க டொலர்களாகும்.

கடந்த 2025 ஆம் ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 2,961.3 மில்லியன் அமெரிக்க டொலர்கள் செலவிடப்பட்டிருந்தன.

அதனுடன் ஒப்பிடுகையில், இந்த ஆண்டின் முதல் 9 மாதங்களில் எரிபொருள் இறக்குமதிக்காக 1,525.9 மில்லியன் அமெரிக்க டொலர்கள் கூடுதல் செலவு ஏற்பட்டுள்ளதுடன், இது 51.5% அதிகரிப்பாகும்.

இருப்பினும், கடந்த செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிச் செலவு, முந்தைய ஆண்டின் செப்டம்பர் மாதத்துடன் ஒப்பிடுகையில் 5.8% (25.6 மில்லியன் டொலர்கள்) சிறிய குறைவைக் காட்டியுள்ளது.

2025 செப்டம்பர் மாதத்தில் எரிபொருள் இறக்குமதிக்கு 440.7 மில்லியன் டொலர்கள் செலவிடப்பட்டிருந்த நிலையில், இந்த ஆண்டின் செப்டம்பர் மாதத்தில் அது 415.1 மில்லியன் டொலர்களாகக் குறைந்துள்ளது.

இதேவேளை, 2026 ஆம் ஆண்டின் முதல் காலாண்டின் இறுதியில் மத்திய கிழக்கில் நிலவிய மோதல் நிலைமைகள் தீவிரமடைந்ததைத் தொடர்ந்து, உள்ளூர் சந்தையில் எரிபொருள் விலைகள் உயர்ந்தன.

இதன் காரணமாக இலங்கை பெட்ரோலியக் கூட்டுத்தாபனத்தின் நிகர விற்பனை வருமானமும் கணிசமாக அதிகரித்துள்ளது.

அதன்படி 2025 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 410.7 பில்லியன் ரூபாயாக பதிவான நிகர விற்பனை வருமானம், 2026 ஆம் ஆண்டின் முதல் 6 மாதங்களில் 40.4% இனால் அதிகரித்து 576.6 பில்லியன் ரூபாயாக உயர்ந்துள்ளது.

மத்திய கிழக்கு பதற்ற நிலைமைகளுக்கு மத்தியில், ஹோர்முஸ் நீரிணை ஊடான எண்ணெய் போக்குவரத்துக்குக் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டமை உள்ளிட்ட காரணங்களால் உலகளாவிய ஆற்றல் விநியோகச் சங்கிலிகளுக்கு பெரும் பாதிப்புகள் ஏற்பட்டன.

இதன் விளைவாக, உலகளாவிய கச்சா எண்ணெய் மற்றும்  எரிபொருள் விலைகளுடன், கப்பல் கட்டணங்கள் மற்றும் காப்பீட்டுச் செலவுகளும் உயர்ந்தமையே இந்தச் செலவு அதிகரிப்புக்கு முதன்மை காரணமாகும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment