சிறைத்தண்டனை அனுபவித்து வரும் கைதிகளுக்கு ஜனாதிபதி பொதுமன்னிப்பு வழங்குவதற்காக முறையான பொறிமுறையொன்றை அமைப்பது தொடர்பாக, ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் சிதம்பரம்பிள்ளை துரைராஜா தலைமையிலான குழு பரிந்துரைகளை சமர்ப்பித்துள்ளது.
அதன் தொகுப்பை அமைச்சரவை ஆராய்ந்து வருவதாக நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சர் ஹர்ஷன நாணயக்கார தெரிவித்தார்.
பொதுபலசேனா அமைப்பின் பொதுச்செயலாளர் கலகொடஅத்தே ஞானசார தேரர் நீதிமன்றத்தில் முன்னிலைபடுத்தப்பட்ட போது, அவரை சிவில் ஆடைகளை அணியுமாறு சிறைச்சாலை அதிகாரிகள் வற்புறுத்தியமை தொடர்பாக எழுந்துள்ள சர்ச்சை குறித்து வினவியபோதே, ஹர்ஷன நாணயக்கார இந்த விடயத்தைக் குறிப்பிட்டதாக பத்திரிகை ஒன்று செய்தி வெளியிட்டுள்ளது.
இது தொடர்பில் மேலதிக விளக்கமளிக்க அமைச்சர் மறுத்து விட்டதாகவும், இந்த பரிந்துரைகள் குறித்து அமைச்சரவை இன்னும் ஒருமித்த கருத்தை எட்டவில்லை என்று கூறியதாகவும் அச்செய்தியில் தெரிவிக்கப்படுகின்றது.
அரசியலமைப்பின் 34(1) ஆம் உறுப்புரையின் ஏற்பாடுகள், ஏனைய சட்டப்பூர்வ சட்டங்கள் மற்றும் நீதித்துறைத் தீர்ப்புகள் என்பவற்றை ஆராய்வதற்காக 2025 ஜூன் 25 அன்று தேசிய மக்கள் சக்தி அரசாங்கத்தினால் துரைராஜா தலைமையிலான இந்தக் குழு நியமிக்கப்பட்டது.
இந்த அறிக்கையை நீதித் துறை தலைவர் ஓய்வுபெற்ற உயர்நீதிமன்ற நீதியரசர் துரைராஜா, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாடு அமைச்சின் செயலாளர் ஆயிஷா ஜினசேனாவிடம் கையளித்தார்.
நீதிமன்ற அவமதிப்பு குற்றச்சாட்டிற்காக ஆறு வருட கால கடுங்காவல் தண்டனை அனுபவித்து வந்த ஞானசார தேரருக்கு மைத்திரிபால சிறிசேனவினால் வழங்கப்பட்ட ஜனாதிபதி மன்னிப்பை, இந்த ஆண்டு செப்டெம்பரில் உயர்நீதிமன்றம் இரத்து செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்னரே அரசாங்கம் ஜனாதிபதி மன்னிப்பு தொடர்பான வழிகாட்டுதல்களைக் கோரியிருந்தது