தீவகக் கல்வி வலயத்திற்குட்பட்ட நெடுந்தீவு, நயினாதீவு, அனலைதீவு மற்றும் எழுவைதீவு ஆகிய கடல் கடந்த தீவுகளில் கல்வி கற்கும் க.பொ.த. சாதாரண தர மாணவர்களுக்கு விஞ்ஞான பாடத்திற்குரிய செயன்முறைகளை நேரடியாக மேற்கொண்டு கற்றுக்கொள்ளும் வாய்ப்பை ஏற்படுத்தும் நோக்கில், கடந்த மாதம் 29, 30 ஆகிய திகதிகளில் தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலையத்தில் இரு நாள் தங்குமிட விஞ்ஞான செயன்முறைப் பயிற்சி முகாம் இடம்பெற்றது.
84 மாணவர்கள் இப்பயிற்சி முகாமில் கலந்துகொண்டனர்.

பௌதிகவியல் ,இரசாயனவியல் , உயிரியல் ஆகிய பாடப்பிரிவுகளில் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கு முக்கியத்துவம் வாய்ந்த பல்வேறு செய்முறைகளை மாணவர்கள் நேரடியாக மேற்கொண்டு, நடைமுறை அனுபவங்களைப் பெற்றுக்கொண்டனர்.
கடல் கடந்த தீவுகளில் கல்வி கற்கும் மாணவர்களுக்கு இவ்வாறான நேரடிச் செயன்முறைப் பயிற்சிகள் வழங்கப்படுவதன் மூலம், அவர்களின் விஞ்ஞான அறிவு, செயன்முறைத் திறன் மற்றும் க.பொ.த. சாதாரண தரப் பரீட்சைக்கான தயார்நிலை மேலும் வலுப்படுத்தப்படுகின்றது.
இப்பயனுள்ள நிகழ்வை சிறப்பாக முன்னெடுப்பதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்தித் தந்த தொண்டைமானாறு தேசிய வெளிக்கள நிலைய நிர்வாகத்தினருக்கும், மாணவர்களுக்கான போக்குவரத்து வசதிகளை ஏற்படுத்தித் தந்த சர்வதேச மருத்துவ சுகாதார நிறுவனத்தினருக்கும் தீவகக் கல்வி வலயத்தின் சார்பில் நன்றி தெரிவிக்கப்பட்டுள்ளது