நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது அழுத்தம் செலுத்த முயற்சிக்காதீர்கள் – சஜித்

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

நிறைவேற்று ஜனாதிபதி முறைமையை ஒழிப்போம் என்று கூறி ஆட்சிக்கு வந்துவிட்டு, நீதித்துறையின் சுயாதீனத்தின் மீது அழுத்தம் செலுத்த முயற்சிக்காதீர்கள் என எதிர்க்கட்சித் தலைவர் சஜித் பிரேமதாச தெரிவித்தார்.

பாராளுமன்றத்தில் செவ்வாய்க்கிழமை (04/08) நிலையியற் கட்டளை 27/2 இன் கீழ் கேள்வி எழுப்பி உரையாற்றுகையிலேயே இவ்வாறு தெரிவித்தார்.

அங்கு தொடர்ந்து குறிப்பிடுகையில்,

நாட்டின் நீதித்துறை அமைப்பின் செயல்திறனை அதிகரிக்கும் நோக்கத்துடன் நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதெல்லையை நீடிக்கும் யோசனையை அரசாங்கம் முன்வைத்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. எவ்வாறாயினும், இந்த யோசனை தொடர்பில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் உள்ளிட்ட சட்டத்துறையைச் சேர்ந்த பல அமைப்புகள் எதிர்ப்பு தெரிவித்துள்ளன.

மேலும், 2023 ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் நீதி அமைச்சுக்காகவே தயாரிக்கப்பட்ட அறிக்கையிலும் வேறு முன்னுரிமைகள் வலியுறுத்தப்பட்டுள்ளன. இதற்கமைய, அரசாங்கத்தின் கொள்கை அடிப்படையையும் எதிர்கால நடவடிக்கைகள் பற்றிய தெளிவான விளக்கத்தையும் பெற்றுக்கொள்வதற்காக பின்வரும் கேள்விகளை முன்வைக்கின்றேன்;

நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பதானது நீதித்துறைச் செயல்திறனை மேம்படுத்தும் பரந்த வேலைத்திட்டத்தின் ஒரு பகுதி என அரசாங்கம் கூறுகிறது. அப்படியானால், அத்தகைய பரந்த வேலைத்திட்டத்தின் ஏனைய மறுசீரமைப்புகள் யாவை? அவற்றை நடைமுறைப்படுத்துவதற்கான துல்லியமான கால அட்டவணை யாது?

அரசாங்கம் சுட்டிக்காட்டுவது போல், தேங்கிக் கிடக்கும் 1.1 மில்லியன் வழக்குகளில் எவ்வளவு தொகையானவை நீதிபதிகளின் பற்றாக்குறையினால் ஏற்பட்டுள்ளன? எவ்வளவு தொகையானவை நீதித்துறை நிர்வாகம், அரசாங்க இரசாயனப் பகுப்பாய்வுத் திணைக்களம், சட்டமா அதிபர் திணைக்களம் அல்லது ஏனைய நிறுவனங்களின் தாமதங்கள் காரணமாக ஏற்பட்டுள்ளன? அது தொடர்பான உத்தியோகபூர்வ தரவுகளை சபையில் சமர்ப்பிக்க முடியுமா?

2023 ஆம் ஆண்டில் ஆசிய அபிவிருத்தி வங்கியின் தொழில்நுட்ப உதவியுடன் நீதி அமைச்சுக்காகவே தயாரிக்கப்பட்ட மறுசீரமைப்பு அறிக்கையின் மூலமும், அமைப்பு ரீதியான மறுசீரமைப்புகளுக்கே முன்னுரிமை வழங்கப்பட்டுள்ளது. அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள பரிந்துரைகளை நடைமுறைப்படுத்துவதன் பிரகாரம் முன்னேற்றம் என்ன? இதுவரை நடைமுறைப்படுத்தப்படாத பரிந்துரைகள் யாவை?

இலங்கை சட்டத்தரணிகள் சங்கம், சட்ட ஆணைக்குழு, சட்டமா அதிபர் திணைக்களம் மற்றும் நீதிச்சேவை ஆணைக்குழு ஆகியவற்றுடன் இந்தத் திருத்தங்கள் தொடர்பாகப் போதுமான கலந்தாலோசனைகள் நடத்தப்பட்டனவா? அவ்வாறெனில், அந்தத் திகதிகள் யாவை? அது குறித்த அரசாங்கத்தின் நிலைப்பாடு யாது?

பொதுநலவாய சட்டத்தரணிகள் சங்கம் பிரான்ஸ் தேசிய சட்டத்தரணிகள் பேரவை உள்ளிட்ட சட்டத்துறையின் பல அமைப்புகள் இது தொடர்பில் கடுமையான எதிர்ப்பைத் தெரிவித்துள்ளன. அந்த எதிர்ப்புகளை அரசாங்கம் கவனத்தில் கொண்டுள்ளதா ? அது பற்றிய அரசாங்கத்தின் பதில் என்ன?

தற்போதுள்ள உயர்நீதிமன்ற மற்றும் கீழ் நீதிமன்ற வெற்றிடங்களை முழுமையாக நிரப்பி முடிக்காமல் ஓய்வூதிய வயதை நீடிப்பதன் மூலம் மட்டுமே நீதிமன்றங்களின் சட்டத் தாமதங்கள் குறையும் என்பதற்கு அரசாங்கம் வசம் உள்ள பின்னணி ஆய்வுகள் யாவை? அந்த ஆய்வுகளுக்கு அமைய, நீதிபதிகளின் ஓய்வுபெறும் வயதை நீட்டிப்பது வழக்கு விசாரணைகளைத் துரிதப்படுத்துவதற்கு எவ்வாறு தாக்கம் செலுத்துகின்றது?

நீதித்துறை மறுசீரமைப்பின் வெற்றியை அளவிடுவதற்கு அரசாங்கம் பயன்படுத்தும் பிரதான குறிகாட்டிகள் யாவை? நீதிபதிகளின் ஓய்வூதிய வயதை நீட்டிப்பதன் மூலம் அக்குறிகாட்டிகளில் என்ன மாற்றத்தை எதிர்பார்க்கிறீர்கள்?

உத்தேச அரசியலமைப்புத் திருத்தங்கள் சட்ட வரைஞரிடம் எப்போது சமர்ப்பிக்கப்பட்டன? அந்த வரைவு சட்டமா அதிபரால் எப்போது அங்கீகரிக்கப்பட்டது? இத்திருத்த வரைவை எப்போது வர்த்தமானியில் வெளியிடுவதற்கு எதிர்பார்க்கப்படுகிறது? முதலாம் வாசிப்புக்காக பாராளுமன்றத்தில் எப்போது சமர்ப்பிக்கப்படும்? என கேட்கிறேன் என்றார்.

Share this Article
Leave a comment