தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

வடமாகாணத்தில் சேவையில் ஈடுபடும் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடை அறிமுகம் செய்து வைக்கும் நிகழ்வு, போக்குவரத்து, நெடுஞ்சாலைகள் மற்றும் நகர அபிவிருத்தி அமைச்சர் பிமல் ரத்நாயக்க தலைமையில் இன்று (01/07) நடைபெற்றது.

அமைச்சர் பிமல் ரத்நாயக்க, கிளிநொச்சியிலுள்ள வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைக்கு இன்று உத்தியோகபூர்வ விஜயமொன்றை மேற்கொண்டிருந்தார்.

அங்கு வருகை தந்த அமைச்சரை, அதிகார சபையின் தலைவர் பொறியியலாளர் எஸ்.விமலேஸ்வரன் வரவேற்றார். தொடர்ந்து, வடமாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபையின் செயற்பாடுகளைப் பார்வையிட்ட அமைச்சர், அங்குள்ள உத்தியோகத்தர்களுடனும் கலந்துரையாடினார்.

இதனைத் தொடர்ந்தே, வடமாகாண தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துநர்களுக்கான புதிய சீருடைகள் அறிமுகம் செய்து வைக்கப்பட்டன.

பயணிகளுக்கு ஏதேனும் அசௌகரியங்கள் ஏற்பட்டால் அதிகார சபைக்கு உடனடியாக முறைப்பாடு செய்யத்தக்க வகையில், தொடர்பு கொள்ள வேண்டிய தொலைபேசி இலக்கம் அச்சிடப்பட்ட சீருடையே இதன்போது அறிமுகப்படுத்தப்பட்டது.

இதன் மூலம் பயணிகளுக்கு மிகவும் வினைத்திறனான சேவையை வழங்க முடியும் என எதிர்பார்க்கப்படுகிறது.

இந்நிகழ்வில் தேசிய மக்கள் சக்தியின் கிளிநொச்சி மாவட்ட அமைப்பாளர் மருங்கன் மோகன், தனியார் பேருந்து உரிமையாளர் சங்கப் பிரதிநிதிகள், சாரதிகள் மற்றும் நடத்துநர்கள் எனப் பலரும் கலந்து கொண்டனர்.

Share this Article