அரச முத்திரைகளை போலியாக தயாரித்த மூவர் கைது!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

கொழும்பு பிரதான நீதவான் மற்றும் பல்வேறு அரச நிறுவனங்களின் உத்தியோகபூர்வ முத்திரைகளை போலியாக தயாரித்து தம்வசம் வைத்திருந்த குற்றச்சாட்டில் கைது செய்யப்பட்ட மூன்று சந்தேகநபர்களை எதிர்வரும் ஜூலை மாதம் 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கொழும்பு பிரதான நீதவான் நீதிமன்றம் இன்று (19/06) உத்தரவிட்டுள்ளது.

குற்றப்புலனாய்வுத் திணைக்களத்தால் கைது செய்யப்பட்ட பிரியந்த ரத்நாயக்க மற்றும் காணிப் பதிவு அலுவலக ஊழியர்களாகப் பணியாற்றிய விஜேவீர படபெந்திகே குஷான், சுதத் இந்திக்க ஆகியோரே இவ்வாறு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.

நீதிமன்றத்தில் சமர்ப்பணங்களை முன்வைத்த குற்றப்புலனாய்வுத் திணைக்கள அதிகாரிகள், நீதிமன்றத்திடம் பெறப்பட்ட சோதனைக் கட்டளைக்கு அமைய முதலாவது சந்தேகநபரின் வீடு சோதனையிடப்பட்டதாகத் தெரிவித்தனர்.

அங்கு “கொழும்பு நீதவானுக்காகப் பதிவாளர்” எனத் தயாரிக்கப்பட்ட இந்த நீதிமன்றத்தின் உத்தியோகபூர்வ முத்திரை ஒன்று மீட்கப்பட்டதாக குறிப்பிட்ட அதிகாரிகள், அதற்கு மேலதிகமாக போலியாகத் தயாரிக்கப்பட்ட காணிப் பதிவு அலுவலகம், நோட்டரிமார்கள், வைத்தியர்கள், அதிபர்கள், மாநகரசபைகள் மற்றும் பிரதேச சபைகளின் அதிகாரிகள் உள்ளிட்ட பல அரச நிறுவனங்களின் பெருமளவிலான உத்தியோகபூர்வ முத்திரைகளும் மீட்கப்பட்டதாகத் தெரிவித்தனர்.

இந்தச் சந்தேகநபரிடமிருந்து மீட்கப்பட்ட அரச உத்தியோகபூர்வ முத்திரைகளின் தொகுதியை இலங்கை அஞ்சல் திணைக்களத்தின் முத்திரைப் பணியகத்திற்கு அனுப்பி அறிக்கை ஒன்றைப் பெற்றுக் கொள்வதற்கு அனுமதி வழங்குமாறு விசாரணை அதிகாரிகள் நீதிமன்றத்திடம் கோரினர்.

முதலாவது சந்தேகநபரின் அறிவுறுத்தலின் பேரில், இரண்டாவது மற்றும் மூன்றாவது சந்தேகநபர்கள் தெல்கந்த காணிப் பதிவு அலுவலகத்தில் வைக்கப்பட்டிருந்த காணிகளின் மூலப் பத்திரங்களைத் திருடி, முதலாவது சந்தேகநபருக்கு ஒரு இலட்சத்திற்கும் அதிகமான ரூபாவிற்கு விற்பனை செய்துள்ளமை விசாரணைகளின் போது தெரியவந்துள்ளதாக அதிகாரிகள் குறிப்பிட்டனர்.

இந்தச் சந்தேகநபர்கள் இவ்வாறான ஒழுங்கமைக்கப்பட்ட முறையில் செயற்பட்டு, நாட்டின் பல்வேறு பகுதிகளில் உள்ள பல காணிகளுக்குப் போலியான பத்திரங்களைத் தயாரித்துள்ளதாக விசாரணைகளின் போது சந்தேகிக்கத்தக்க விடயங்கள் வெளிச்சத்திற்கு வந்துள்ளதாகவும், விசாரணைகள் இன்னும் நிறைவடையாததால் இவர்களை விளக்கமறியலில் வைக்குமாறும் அதிகாரிகள் நீதிமன்றக் கோரிக்கை விடுத்தனர்.

முன்வைக்கப்பட்ட விடயங்களை ஆராய்ந்த கொழும்பு பிரதான நீதவான் அசங்க எஸ். போதரகம, சந்தேகநபர்களை ஜூலை 03ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க உத்தரவிட்டார்.

Share this Article
Leave a comment