அம்பாறை மாவட்டம் சம்மாந்துறை பகுதியில், விடுதலைப் புலிகள் அமைப்பால் கடந்த காலத்தில் புதைத்து வைக்கப்பட்டதாக சந்தேகிக்கப்படும் ஆயுதங்கள் மற்றும் தங்கத்தைத் தேடி இன்று முன்னெடுக்கப்பட்ட விசேட அகழ்வு நடவடிக்கை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
சம்மாந்துறை பொலிஸ் பிரிவுக்குட்பட்ட தொய்யும் வட்டை கீழ்கண்டம் பகுதியில் அமைந்துள்ள தனியார் வயல் காணியொன்றிலேயே இந்த அகழ்வு நடவடிக்கை முன்னெடுக்கப்பட்டது.
அம்பாறை விசேட பொலிஸ் புலனாய்வு பிரிவினருக்கு கிடைத்த இரகசியத் தகவலின் அடிப்படையில், நீதிமன்ற உத்தரவைப் பெற்று இந்த விசேட தேடுதல் மற்றும் அகழ்வு நடவடிக்கை ஆரம்பிக்கப்பட்டதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இன்று காலை 9 மணி முதல் பகல்12 மணி வரை பக்கோ இயந்திரங்களின் உதவியுடன் நிலம் தோண்டப்பட்டு பல்வேறு பகுதிகள் பரிசோதிக்கப்பட்டன. ஆனால் பல மணி நேரம் நீடித்த அகழ்வு நடவடிக்கையின் முடிவில் எந்தவொரு ஆயுதமும், தங்கமும் அல்லது சந்தேகத்திற்கிடமான பொருட்களும் மீட்கப்படவில்லை என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
இந்த விசேட நடவடிக்கையில் சம்மாந்துறை நீதிமன்ற நீதிவான் நூர்தீன் முஹம்மட் சர்ஜுன், அம்பாறை மாவட்ட சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சகர், கல்முனை பிராந்திய உதவிப் பொலிஸ் அத்தியட்சகர், சம்மாந்துறை பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி ,சம்மாந்துறை பிரதேச செயலாளர் எஸ்.எல்.எம். ஹனிபா, பிரதேச சபை தவிசாளர் ஐ.எல்.எம். மாஹிர், விசேட அதிரடிப்படை அதிகாரிகள், கிராம உத்தியோகத்தர்கள், தொல்பொருள் திணைக்கள அதிகாரிகள் மற்றும் பிரதேச செயலக அதிகாரிகளும் நேரில் கண்காணிப்பு நடவடிக்கைகளில் ஈடுபட்டிருந்தனர்.