கணேமுல்ல சஞ்சீவ கொலை – உடந்தையாக இருந்த மற்றொருவர் கைது !

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளியான சஞ்சீவ குமார சமரரத்ன என்ற ‘கணேமுல்ல சஞ்சீவ’ என்பவரின் கொலைக்கு உடந்தையாக இருந்ததற்காகவும், அதற்காக துப்பாக்கிகளை வழங்கியதற்காகவும், ஒஸ்மொண்ட் குணசேகர என்ற ‘கம்பஹா ஒஸ்மொண்ட்’ என்ற நபர் கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவினரால் கைது செய்யப்பட்டுள்ளார்.

2025 பெப்ரவரி 19 ஆம் திகதி, கொழும்பு எண். 05 நீதிவான் நீதிமன்ற வளாகத்துக்குள் வழக்கு விசாரணைக்காக முன்னிலைப்படுத்தப்பட்ட போது, கணேமுல்லா சஞ்சீவ சுட்டுக் கொல்லப்பட்டார்.

இது தொடர்பாக, தற்போது தடுப்புக் காவலில் உள்ள சந்தேக நபர்களிடமிருந்து பெறப்பட்ட தகவலின் அடிப்படையில், குறித்த சந்தேக நபர் நேற்று இரவு (13/05) கம்பஹாவில் உள்ள ஸ்ரீ போதி சாலைப் பகுதியில் கைது செய்யப்பட்டார்.

வெளிநாட்டில் வசிக்கும் ஒழுங்கமைக்கப்பட்ட குற்றவாளிகளுடன் இணைந்து இந்தக் கொலைத் திட்டம் தீட்டப்பட்டதும், குற்றத்தைச் செய்வதற்குத் தேவையான துப்பாக்கிகளை வழங்கி இந்த சந்தேக நபர் கொலைக்கு உதவியும் உடந்தையாகவும் இருந்ததும் விசாரணைகளில் தெரியவந்துள்ளது.

சந்தேக நபர் கைது செய்யப்பட்டபோது, அவரிடமிருந்து வெளிநாட்டில் தயாரிக்கப்பட்ட துப்பாக்கி, 10 தோட்டாக்கள் மற்றும் 2 மெகசின்கள் மீட்கப்பட்டுள்ளன. கைது செய்யப்பட்ட சந்தேக நபர், கம்பஹா பகுதியைச் சேர்ந்த 69 வயது நபர் ஆவார்.

கொழும்பு மாவட்ட குற்றப்பிரிவு இந்த கொலை தொடர்பாக மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகிறது.

Share this Article