அரச சேவைகளில் ஏற்படவுள்ள மாற்றம்!!

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரச சேவைகளைத் தொலைதூரத்தில் இருந்து வழங்குவதில் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது குறித்து நிறுவனத் தலைவர்களுக்கு வழிகாட்டுதல்களை வெளியிடுவதற்கு டிஜிட்டல் பொருளாதாரம் மற்றும் பொது நிர்வாக அமைச்சுக்கள் இணைந்து நடவடிக்கை எடுத்துள்ளன.

மத்திய கிழக்கு பிராந்தியத்தில் நிலவும் போர்ச் சூழலால் நாட்டுக்கு ஏற்பட்டுள்ள எரிபொருள் விநியோகக் கட்டுப்பாடுகள் மற்றும் ஒட்டுமொத்த எரிசக்தி முகாமைத்துவத் தேவைகள் காரணமாக, தேசிய எரிபொருள் கையிருப்பின் மீதான அழுத்தத்தைக் குறைப்பதற்காக அலுவலக சேவைகளை மட்டுப்படுத்தப்பட்ட அளவில் முன்னெடுக்க அரசாங்கம் ஆரம்பத்தில் நடவடிக்கை எடுத்திருந்தது.

பிரதமர் ஹரிணி அமரசூரியவின் தலைமையில் நியமிக்கப்பட்டுள்ள அரச சேவையை முறையாகப் பேணிச் செல்வது தொடர்பான அமைச்சரவைக் குழுவின் உத்தரவின் பேரில், பொது நிர்வாகம், மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சுடன் கலந்துரையாடி, முடிந்தவரை தொலைதூரச் சேவை முறைக்கு மாறுவதற்கான சாத்தியக்கூறுகளை ஆராயுமாறு டிஜிட்டல் பொருளாதார அமைச்சுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

அதன்படி, தொலைதூரத்தில் இருந்து சேவைகளை வழங்குவதற்கும், சாதாரண அலுவலகப் பணிகளுக்கும் டிஜிட்டல் தொழில்நுட்பங்களைச் சிறந்த முறையில் பயன்படுத்துவது தொடர்பான பரிந்துரைகளை அனைத்து அரச நிறுவனத் தலைவர்களுக்கும் வழங்குவதற்காக டிஜிட்டல் பொருளாதார அமைச்சினால் இடைக்கால வழிகாட்டல்கள் அறிமுகப்படுத்தப்பட்டுள்ளன.

இந்த வழிகாட்டல்கள் மூன்று மொழிகளிலும் தயாரிக்கப்பட்டுள்ளதுடன், அவற்றை https://mode.gov.lk/docs/guidelines என்ற இணைப்பின் மூலம் தரவிறக்கம் செய்து கொள்ளலாம்.

Share this Article
Leave a comment