எரிபொருள் விலையேற்றத்தால் மீனவர்களுக்கு விசேட நிவாரணம் – ஜனாதிபதி அறிவிப்பு!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இஸ்ரேல், அமெரிக்கா – ஈரான் போர்ச் சூழலால் உலகளாவிய ரீதியில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி நிலையையடுத்து நாட்டில் ஏற்பட்டுள்ள எரிபொருள் நெருக்கடி குறித்து ஜனாதிபதி உரையாற்றுகையில் மீனவர்கள் மற்றும் விவசாயிகளுக்கான மானிய திட்டங்கள் குறித்தும் இதன் போது ஜனாதிபதி கருத்து வெளியிட்டார்.

குறைந்த வருமானம் பெறும் அஸ்வெசும திட்ட பயனாளர்களுக்கான மாதாந்திர கொடுப்பனவு 17,500 ரூபாவிலிருந்து 25,000 ரூபாவாக உயர்த்தப்பட்டுள்ளதாக ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க இன்று செவ்வாய்க்கிழமை பாராளுமன்றத்தில் அறிவித்துள்ளார். இந்த அதிகரிப்பு ஏப்ரல் மாதத்திற்கு மட்டுமே வழங்கப்படவுள்ளதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.

நாட்டின் தற்போதைய பொருளாதார நெருக்கடி மற்றும் எரிபொருள் விலை உயர்வு காரணமாக கடற்றொழிலாளர்கள் எதிர்கொள்ளும் சிரமங்களை கருத்தில் கொண்டு, அவர்களுக்கு நிவாரணம் வழங்கும் வகையில் அரசாங்கம் புதிய விசேட திட்டங்களையும் அறிவித்துள்ளது.

இதன்படி, எதிர்வரும் மூன்று மாதங்களுக்கு எரிபொருள் நிவாரணம் வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளதாக ஜனாதிபதி தெரிவித்தார். இந்த நிவாரணத்தின் கீழ், ஒரு லீற்றர் டீசலுக்கு 100 ரூபாயும், பெற்றோல் ஒரு லீற்றருக்கு 20 ரூபாயும் வழங்கப்படவுள்ளது.

இந்த திட்டத்திற்காக மாதந்தோறும் 200 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளதுடன், மொத்தம் மூன்று மாதங்களுக்கு 600 கோடி ரூபாய் செலவிடப்படும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.

மேலும், சாதாரண இயந்திரம் பொருத்தப்பட்ட படகுகளைப் பயன்படுத்தும் கடற்றொழிலாளர்களுக்கு, ஏற்கனவே வழங்கப்படும் 100 ரூபாய் நிவாரணத்துடன் கூடுதலாக 50 ரூபாய் வழங்கப்பட உள்ளது. இதன் மூலம் ஒரு லீற்றருக்கு மொத்தம் 150 ரூபாய் நிவாரணம் கிடைக்கும்.

ஒரு நாளுக்கு 25 லீற்றர் வீதம், மாதத்திற்கு 25 நாட்கள் கணக்கில் எடுத்துக் கொள்ளப்பட்டு, மாதந்தோறும் 31,250 ரூபாய் நேரடியாக கடற்றொழிலாளர்களின் வங்கிக் கணக்குகளில் வைப்பு செய்யப்படும். இந்த கொடுப்பனவு தொடர்ந்து மூன்று மாதங்களுக்கு வழங்கப்படும்.

அதேவேளை, ஆழ்கடல் கடற்றொழிலில் ஈடுபடும் பல நாள் படகுகளுக்காக, ஒவ்வொரு பயணத்திற்கும் ஒன்றரை இலட்சம் ரூபாய் எரிபொருள் நிவாரணமாக வழங்க அரசாங்கம் தீர்மானித்துள்ளது. பொதுவாக மூன்று மாதங்களுக்கு ஒருமுறை கடலுக்கு செல்லும் இக்கடற்றொழிலாளர்களின் எரிபொருள் செலவைக் குறைப்பதே இந்த திட்டத்தின் நோக்கமாகும்.

பாராளுமன்றத்தில் இன்று விசேட உரையாற்றிய போது ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க மேற்கண்ட அறிவிப்புகளை வெளியிட்டார்.

Share this Article