அக்ரஹார காப்புறுதித் திட்டத்தில் புதிய மாற்றங்கள்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

2026 ஆம் ஆண்டு வரவு செலவுத் திட்டத்தில் முன்மொழியப்பட்டதன் பிரகாரம், அரச உத்தியோகத்தர்களுக்கான அக்ரஹார காப்புறுதித் திட்டத்தில் பாரிய திருத்தங்களை பொது நிர்வாக, மாகாண சபைகள் மற்றும் உள்ளூராட்சி அமைச்சு அறிமுகப்படுத்தியுள்ளது.

இந்த புதிய மாற்றங்கள் 2026 மார்ச் 01 ஆம் திகதி முதல் நடைமுறைக்கு வருகின்றன.

சுகாதாரப் பிரதிபயன்களை விரிவுபடுத்துவதையும், திட்டத்தின் ஸ்திரத்தன்மையை உறுதிப்படுத்துவதையும் நோக்கமாகக் கொண்டு அமைச்சரவையினால் இத்தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது.

முக்கிய மாற்றங்கள் மற்றும் புதிய ஏற்பாடுகள்:

மாதாந்த பங்களிப்புத் தொகை உயர்வு: காப்புறுதி நன்மைகளுக்காக அறவிடப்படும் மாதாந்த பங்களிப்புத் தொகைகள் பின்வருமாறு திருத்தப்பட்டுள்ளன:

குறைந்தபட்ச மாதாந்த பங்களிப்பு: ரூபா. 200/-

வெள்ளித் திட்டம் (Silver Scheme): ரூபா. 450/-

தங்கத் திட்டம் (Gold Scheme): ரூபா. 750/-

அக்ரஹார தரவுத் தொகுதியில் பதிவு செய்தல் கட்டாயம்:

2026 ஏப்ரல் 01 முதல் அனைத்துக் கொடுப்பனவுகளும் தரவுத் தொகுதியில் உள்ள தகவல்களின் அடிப்படையிலேயே வழங்கப்படும். எனவே, உத்தியோகத்தர்கள் அக்ரஹார தரவுத் தொகுதியில் பதிவு செய்வதும், தகவல்களை அவ்வப்போது இற்றைப்படுத்துவதும் கட்டாயமாக்கப்பட்டுள்ளது.

வயது எல்லை மாற்றம்:

தனிப்பட்ட விபத்து மற்றும் இயற்கை மரணக் காப்புறுதிகளுக்கான அதிகப்படியான வயது எல்லை “கட்டாய ஓய்வு வயது” எனத் திருத்தப்பட்டுள்ளது. இயற்கை மரணங்களுக்கான நன்மைகளை 70 வயது வரை பெற முடியும் என்பதுடன், ஏனைய காப்புறுதி நன்மைகளை ஆயுட்காலம் முழுவதும் பெற்றுக்கொள்ள முடியும்.

விண்ணப்பங்களை சமர்ப்பிக்கும் கால எல்லை:

வைத்தியசாலைக் கட்டணப் பற்றுச்சீட்டுகளை 90 நாட்களுக்குள் சமர்ப்பிக்க வேண்டும். உறுப்பினர் மரணமடைந்தால், மரண உரிமை கோரிக்கை ஆவணங்களை 06 மாதங்களுக்குள் நிறுவனத் தலைவரின் ஊடாக சமர்ப்பித்தல் வேண்டும்.

மரணத்திற்கு பின்னரான மருத்துவக் கோரிக்கை:

உறுப்பினர் ஒருவர் வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்டிருக்கும் போது மரணமடைந்தால், அவரின் மரணத்திற்கு முன்னரான மருத்துவச் செலவுகளுக்கான கோரிக்கையை மனைவி/கணவர், பிள்ளைகள் அல்லது பெற்றோர் (சம்மதத்தின் பேரில்) முன்வைக்க முடியும்.

தம்பதியினருக்கான நடைமுறை: கணவன் மற்றும் மனைவி ஆகிய இருவருமே அரச உத்தியோகத்தர்களாக இருக்கும் போது, ஒரு பிள்ளைக்கு ஒரு வகை நன்மையை ஒருவரால் மாத்திரமே கோர முடியும். இருவரும் வெவ்வேறு திட்டங்களில் பங்களிப்பு செய்திருந்தால், அதிக நன்மைகள் கிடைக்கும் திட்டத்தின் ஊடாக பொதுவான நன்மைகளுக்கு விண்ணப்பிக்க சந்தர்ப்பம் வழங்கப்படும்.

இந்த புதிய மாற்றங்களைத் தவிர, 2005.05.18 ஆந் திகதிய 12/2005 சுற்றறிக்கையின் ஏனைய ஏற்பாடுகள் மாற்றமின்றி தொடரும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

https://whatsapp.com/channel/0029VbBzT7C05MUe1VUALx3g

Share this Article
Leave a comment