யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் சுற்றுலா அபிவிருத்தி திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கப்பட்டுள்ளதாக யாழ் அரச அதிபர் தெரிவித்துள்ளார்

யாழ்ப்பாண மாவட்ட சுற்றுலா தொடர்பான கலந்துரையாடல் யாழ்ப்பாண மாவட்டத்தின் பாராளுமன்ற உறுப்பினரும் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உப குழுவினுடைய தலைவருமான ஜெயச்சந்திரன்மூர்த்தி றஜீவன் தலைமையில் நேற்றையதினம் (24.02) யாழ் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நடைபெற்றபோதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.
இதன்போது அவர் மேலும் தெரிவிக்கையில்..
பொது நிர்வாக உள்நாட்டவலுவல்கள் அமைச்சின் சுற்று நிருபத்திற்கு அமைவாக மாவட்டம் தோறும் சுற்றுலாவை அபிவிருத்தி செய்வதற்குரிய நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு அதன் அடிப்படையில் சுற்றுலா மேம்பாடு தொடர்பான உப குழு கூட்டம் ஒன்றை நடாத்துமாறு அமைச்சினால் தெரிவிக்கப்பட்டதற்கு அமைவாக, இக் கூட்டம் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது எனத் தெரிவித்தார்.
மேலும், சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை மாவட்டத்தில் முன்னெடுப்பதற்காக அல்லது மேம்படுத்துவதற்காக இன்று கூட்டப்பட்டுள்ள சுற்றுலாத்துறை சார்ந்த இவ் உபகுழு ஒரு வாய்ப்பாக அமையும் என நம்புவதாகவும், பிரதேச சபைகள் பிரதேச செயலகங்கள் மற்றும் நகர மற்றும் மாநகர சபைகள் ஆகிய அனைத்து சபைகளும் ஒருங்கிணைந்து செயற்படுவதன் மூலம் பிரதேச அபிவிருத்தியினை மேற்கொண்டு திட்டங்களை மேலும் வினைத்திறனாக மேற்கொள்ள முடியும் என்றும் தெரிவித்தார்.
மேலும், யாழ்ப்பாண மாவட்டத்தை பொறுத்தவரையில் சுற்றுலாத் துறை தொடர்பாக பல்வேறு முயற்சிகள் பலராலும் முன்னெடுக்கப்பட்டு வருவதாகவும், அதற்கு ஒத்துழைப்பு வழங்குகின்ற அனைத்து உத்தியோகத்தர்களுக்கும் தனது நன்றிகளையும் தெரிவித்தார்.
மேலும் எதிர்காலத்தில் சுற்றுலாத்துறை சார்ந்த செயற்பாடுகளை முன்னெடுக்கும் போது அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் முன் நிகழ்ச்சி திட்டங்களை முன் ஏற்பாட்டுடன் தயாரிக்க வேண்டும் எனவும் பிரதேச மட்டத் திட்டங்களை தயாரித்து அதனை முன்னெடுக்கும் போது அந்தப் பிரதேசத்திற்கு அந்த கிராமத்திற்கு அந்த மாவட்டத்திற்கு தேவையான விடயத்தை மேற்கொள்ள முடியும் எனவும் அரசாங்க அதிபர் தெரிவித்தார்
மேலும், கடந்த வருடம் யாழ்ப்பாண மாவட்டத்தில் 130 மில்லியன் ரூபா நிதி சுற்றுலாவிற்காக ஒதுக்கப்பட்டு கிடைக்கப்பெற்றுள்ளதாகவும், யாழ் மாவட்ட சுற்றுலாவை எவ்வாறு மேம்படுத்தலாம் மற்றும் சுற்றுலா பயணிகளை எவ்வாறு கவரலாம் மற்றும் வேலைவாய்ப்பு புதிய தொழில் வாய்ப்புகளை ஏற்படுத்தலாம் என்பது தொடர்பான ஒரு ஆக்கபூர்வமான கருத்துக்களை முன்வைக்குமாறும் அனைவரும் ஒருங்கிணைந்த வகையில் இச் செயற்பாட்டை முன்னெடுக்க வேண்டும் எனவும் தெரிவித்தார்.
யாழ்ப்பாண மாவட்டத்திற்கு வெளிநாட்டு அலுவல்கள், வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சினால் திட்டங்களுக்காக 130 மில்லியன் ரூபா நிதி ஒதுக்கீட்டின் கீழ் பிரதேச செயலக ரீதியாக முன்னெடுக்கப்படும் 9 திட்டங்களுக்கான அனுமதிகள் தொடர்பாகவும் இத் திட்டங்களின் அமுலாக்கலின் சாத்திய நிலைமைகள் மற்றும் நிலையான தன்மை போன்றவை தொடர்பாக இக் கூட்டத்தில் விரிவாக ஆராயப்பட்டது.
இக் கலந்துரையாடலில் பிரதேச சபைகள் மற்றும் நகர சபைகளுடைய தவிசாளர்கள், வடக்கு மாகாண சபையின் உள்ளூராட்சி அமைச்சின் செயலாளர்,
சுற்றுலா பணியகத்தின் தலைவர், மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், திட்டமிடல் பணிப்பாளர், பிரதேச செயலாளர்கள், மாவட்ட செயலக பதவி நிலை உத்தியோகத்தர்கள், சுற்றுலாத்துறை சார்ந்த உத்தியோகத்தர்கள் சுற்றுலா துறை சார்ந்த பொலீஸ் உத்தியோகத்தர்கள் உள்ளூராட்சி சபைகளுடைய செயலாளர்கள் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டனர்.