கைப்பேசி பயன்படுத்தி பேருந்து ஓட்டிய இலங்கை போக்குவரத்துச் சபை சாரதிக்கு ஒழுக்காற்று நடவடிக்கை

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

பயணிகள் போக்குவரத்து சேவை விதிமுறைகளை மீறி, வாகனம் செலுத்தும் நேரத்தில் கைப்பேசி பயன்படுத்திய இலங்கை போக்குவரத்துச் சபை வவுனியா சாலை சாரதியொருவருக்கு எதிராக ஒழுக்காற்று நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.

இவ்வாறான தவறுகள் மீண்டும் நடைபெறாத வகையில், இனி வருங்காலங்களில் விதிமுறைகளை மீறும் சாரதிகள் குறித்து பொதுமக்கள் 0719090900 என்ற தொலைபேசி இலக்கத்திற்கு ஆதாரங்களுடன் முறைப்பாடு செய்யலாம் என வடக்கு மாகாண வீதிப் பயணிகள் போக்குவரத்து அதிகார சபைத் தலைவர் பொறியியலாளர் எஸ். விமலேஸ்வரன் தெரிவித்துள்ளார்.

முன்னதாக, வவுனியா சாலையைச் சேர்ந்த குறித்த சாரதி, பேருந்தை ஓட்டிக் கொண்டிருந்தபோது கைப்பேசி பயன்படுத்தியதாக ஆதாரங்களுடன் புகார் பெறப்பட்டிருந்தது. இதனால் பயணிகளின் பாதுகாப்பு பாதிக்கப்படக் கூடியதாக இருப்பதால், உடனடி நடவடிக்கை எடுக்குமாறு இலங்கை போக்குவரத்துச் சபை வட பிராந்திய முகாமையாளருக்கு அறிவுறுத்தப்பட்டது.

அதன்படி, சம்பந்தப்பட்ட சாரதிக்கு 3 நாட்கள் கட்டாய ‘மீட்டல் பயிற்சி’ வழங்க தீர்மானிக்கப்பட்டுள்ளது.

இந்நிலையில், அரசோ தனியாரோ என எந்தப் பேருந்தாக இருந்தாலும், பயணிகள் பாதுகாப்பை மீறும் வகையில் செயல்படும் சாரதிகள் குறித்து பொதுமக்கள் விழிப்புடன் இருந்து தேவையான தகவல்களை அதிகாரிகளுக்கு அறிவிக்குமாறு கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

Share this Article
Leave a comment