BIMSTEC அரச நிதி–நாணயக் கொள்கை நிபுணர் குழு ஆரம்பக் கூட்டம் 2026ல் இலங்கையில்

SUB EDITOR
SUB EDITOR
1 Min Read

அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான பிம்ஸ்டெக் (BIMSTEC) நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை, 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காகப் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி சமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் வழங்கியுள்ளது.

வங்காள விரிகுடா பிராந்தியத்தில் பிராந்திய ஒத்துழைப்பு மற்றும் பொருளாதார ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதற்காக வங்காள விரிகுடா பல்துறை தொழில்நுட்ப மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான கூட்டமைப்பு (BIMSTEC) நிறுவப்பட்டுள்ளது.

7வது இந்து சமுத்திர உச்சிமாநாட்டிற்கு இணையாக 2024 பெப்ரவரி மாதம் நடைபெற்ற கலந்துரையாடலின் போது, அரச நிதி மற்றும் நாணயக் கொள்கைகளை வகுத்தல் மற்றும் நடைமுறைப்படுத்தல் தொடர்பான நிபுணத்துவ அறிவு மற்றும் அனுபவங்களை உறுப்பு நாடுகளுக்கிடையில் பகிர்ந்துகொள்வதற்கு வசதி அளிப்பதற்காக ‘அரச நிதி மற்றும் நாணயக் கொள்கை தொடர்பான நிபுணர் குழுவொன்றை அமைப்பதற்கு, அந்தச் சந்தர்ப்பத்தில் இலங்கையின் வெளிவிவகார அமைச்சர் முன்மொழிந்திருந்தார்.

அந்த முன்மொழிவுக்கு அமையத் தயாரிக்கப்பட்ட நிபுணர் குழுவை அமைப்பது தொடர்பான எண்ணக்கருவுக்கு அனைத்து உறுப்பு நாடுகளினதும் அமைச்சர்களின் அங்கீகாரம் கிடைத்துள்ளது.

குறித்த நிபுணர் குழுவின் பணிப்புரை விதிமுறைகள் மற்றும் செயற்பாட்டுத் திட்டத்தைத் தயாரிப்பதற்கு ஏதுவாக, அந்த நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை இலங்கையில் நடத்துவது குறித்துப் பரிசீலிக்குமாறு பிம்ஸ்டெக் செயலகம், வெளிவிவகார, வெளிநாட்டு வேலைவாய்ப்பு மற்றும் சுற்றுலா அமைச்சு ஊடாக உத்தியோகபூர்வமாக இலங்கையிடம் கோரிக்கை விடுத்துள்ளது.

அதற்கமைய, குறித்த நிபுணர் குழுவின் ஆரம்பக் கூட்டத்தை 2026 ஆம் ஆண்டில் இலங்கையில் நடத்துவதற்காக நிதி, திட்டமிடல் மற்றும் பொருளாதார அபிவிருத்தி அமைச்சர் என்ற வகையில் ஜனாதிபதி இந்த யோசனையை அமைச்சரவையில் சமர்ப்பித்திருந்தார்.

Share this Article