கறுப்பு கொடி போராட்டத்திற்கு எதிராக சட்ட நடவடிக்கை – துமிந்த!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

இலங்கையின் 78 ஆவது சுதந்திர தினத்தன்று வடக்கு, கிழக்கில் கறுப்புக்கொடி ஏந்தி அரசுக்கும், அரசமைப்புக்கும் எதிராக செயற்பட்ட நபர்களை கண்டறிந்து அவர்களுக்கு எதிராக கடுமையான சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் பொதுச்செயலாளர் துமிந்த திஸாநாயக்க வலியுறுத்தியுள்ளார்.

கொழும்பில் உள்ள ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் தலைமை அலுவலகத்தில் இன்று (05/02) நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிட்டபோதே அவர் மேற்கண்டவாறு கூறினார். தொடர்ந்து கருத்துத் தெரிவித்த அவர்,

சுதந்திர தின அணிவகுப்பின் போது இராணுவப்படை பிரிவுகளை முறையாக அறிமுகப்படுத்தும் மரபு இம்முறை மீறப்பட்டுள்ளது என்றும் அவர் குறிப்பிட்டார்.

பாரிய உயிர்த் தியாகத்தால் ஈட்டப்பட்ட யுத்த வெற்றியையும், இராணுவத்தின் கௌரவத்தையும் ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க சிறுமைப்படுத்துகின்றார் என்றும் அவர் குற்றஞ்சாட்டினார்.

ஜனாதிபதி அருகில் கடந்து செல்லும் போது ஒவ்வொரு இராணுவப் பிரிவின் விசித்திரங்கள் மற்றும் சாதனைகள் வழக்கமாகச் சொல்லப்படும். ஆனால் இம்முறை அத்தகைய கௌரவம் வழங்கப்படாமல் ‘டித்வா’ சூறாவளி பற்றி மட்டுமே சுட்டிக்காட்டினார்.

யுத்த காலத்தின் போது தலைமை தாங்கிய இராணுவத்தளபதிகள் முன்னிலையிலேயே இந்த செயல் இடம்பெற்றுள்ளது என்றும் அவர் கடுமையாக விமர்சித்துள்ளார்.

ஜனாதிபதி அநுரகுமார திஸாநாயக்க புலம்பெயர் தமிழ் அமைப்புகளின் செய்தியையோ அல்லது அவர்களது தேவைகளையோ நிறைவேற்றுகின்றாரோ என்ற சந்தேகம் எமக்கு எழுகின்றது.

இனங்களுக்கிடையே ஒற்றுமையின்மையை ஏற்படுத்தும் விடயங்களை முன்வைக்க வேண்டாம் எனப் புலம்பெயர் தமிழ் அமைப்புகளிடம் கோரிக்கை விடுக்கின்றேன்.இந்த அரசு யாருடையதோ ஒரு தனிப்பட்ட தேவைக்காகச் செயற்படுகிறது

கல்வித்துறை சீர்திருத்தங்கள் குறித்து கருத்துத் தெரிவித்த துமிந்த திஸாநாயக்க, “6ஆம் தர பாடப் புத்தகங்களில் குளறுபடிகள் இருப்பதை ஜனாதிபதியே ஏற்றுக்கொண்டுள்ள நிலையில், அதற்காகக் கல்வி அமைச்சின் செயலாளர் சி.ஐ.டி. வரை செல்வது தேவையற்றது.

கல்விப் புலத்தில் தவறு செய்தவர்களை நேரடியாக அழைத்து விசாரணை நடத்த முடியும். அரச அதிகாரிகள் கர்வத்துடன் செயற்படக்கூடாது.அவ்வாறான போக்கைக் கடைப்பிடித்தால் ஒருநாள் அவர்கள் தனிமைப்படுத்தப்பட நேரிடும் எனவும், கணக்காய்வாளர் நாயகம் நியமிக்கப்பட்டமையை வரவேற்றும் அவர் கருத்து வெளியிட்டுள்ளார்.

Share this Article