நெடுந்தீவு கிழக்கு சன சமுக நிலையத்தின் வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளிலான அமர்வு-17 நிகழ்வு இன்று (29/12) திங்கட்கிழமை காலை நிலைய மண்டபத்தில் சிறப்பாக இடம்பெற்றது.
வாழ்விற்கான பேரொளி “வாசிப்பு” எனும் தொனிப்பொருளில் இரகுபதி நினைவு நூலகத்தில் அங்கத்தவராகியுள்ள மற்றும் அங்கத்தவராக ஆர்வமுள்ள ஆரம்ப பிரிவு மாணவர்களுக்கான நூலக அறிமுகம் , கதை கூறல் மற்றும் வாசிப்பு ஆர்வத்தினை ஊக்குவித்தல் , மாணவர் ஒழுக்கம் மற்றும் சிறுவர்களது திறனை வெளிக்கொணரல் என்பன நிகழ்வின் அமர்வு – 17 இல் சிறப்பாக இடம்பெற்றது.

இதேவேளை இதுவரையும் இடம்பெற்ற 16 அமர்வுகளில் தொடர்ச்சியாக அதிக அமர்வுகளில் கலந்துகொண்ட 05 சிறார்களான
செல்வன் இ.கிறிஸ்ரிகிப்சன், செல்வன் ம.மதுசன், செல்வி ஞா.மரிபெல், செல்வி யே.விமலராணி, செல்வன் இ. மெயுசன் ஆகியோருக்கு சிறப்பு நினைவுச் சின்னமும், கற்றல் உபகரணங்கள் கொள்வனவுக்கான பரிசு அட்டையும் (Gift voucher) வழங்கி வைக்கப்பட்டதுடன், நிகழ்வில் கலந்துகொண்ட அனைத்து சிறார்களுக்கும் திருக்குறள் விளக்க உரையுடன் கூடிய புத்தகமும் வழங்கிவைக்கப்பட்டது.

நிகழ்வின் வளவாளர்களாக நற்குண முன்னேற்ற அமைப்பின் நெடுந்தீவு இதயத்துடிப்பு வலுவூட்டல் நிலையத்தின் ஒருங்கிணைப்பாளர் பிருந்தா கந்தையா, உதவி ஒருங்கிணைப்பாளர் ரகிலா தர்மலிங்கம் ஆகியோரும் விருந்தினராக ஓய்வுநிலை உதவிக் கல்விப் பணிப்பாளர் செ.மகேசு அவர்களும் கலந்து சிறப்பித்தனர்.

சிறுவர்களிடம் நூல்களை வாசிக்கும் ஆர்வத்தை ஏற்படுத்தும் நோக்கில் வாழ்விற்கான பேரொளி”வாசிப்பு” எனும் நிகழ்விற்கான வழிகாட்டல் மற்றும் அனுசரணையினை “வள்ளித்தமிழ் அமுதம் செயற்பாட்டுக் குழு”வினர் வழங்கி வருகின்றமை குறிப்பிடத்தக்கது.