வேலணை பிரதேச சபையின் ஆளுகைக்குட்பட்ட பகுதிகளில், 2026 ஜனவரி முதலாம் திகதி முதல் மரணச் சடங்குகளின் போது வீடுகளில் பட்டாசு கொழுத்துவது முற்றாகத் தடை செய்யப்படும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.
வேலணை பிரதேச சபையின் இவ்வாண்டுக்கான இறுதி சபை அமர்வு கடந்த சனிக்கிழமை (டிசம்பர் 26) தவிசாளர் சிவலிங்கம் அசோக்குமார் தலைமையில் நடைபெற்றது. இதன் போது, குறித்த விடயம் தொடர்பான முன்மொழிவை தவிசாளர் சபையில் சமர்ப்பித்து விவாதத்திற்கு உட்படுத்தினார்.
சபை விவாதத்தின் போது உறுப்பினர்கள் பல்வேறு கருத்துக்களை முன்வைத்ததுடன், சிலர் ஆலோசனைகளையும் தெரிவித்தனர். குறிப்பாக, இறந்தவர்களை எரியூட்டும் அல்லது அடக்கம் செய்யும் மயானங்கள் பிரதேச சபையின் ஆளுகையின் கீழ் இருப்பதால், இறுதிக் கிரியைகளுக்கான அனுமதி வழங்கும் சந்தர்ப்பத்தில் பட்டாசு கொழுத்துதல் தொடர்பான தடை உத்தரவு அல்லது உறுதியை பெற்ற பின்னரே அனுமதி வழங்கலாம் என சுட்டிக்காட்டப்பட்டது.
அத்துடன், குறித்த தடை மீறப்படும் பட்சத்தில் பாரியளவிலான தண்டப்பணம் அறவிடப்பட வேண்டும் என்றும், அனுமதி பற்றுச்சீட்டில் தடை தொடர்பான விபரங்களும், மீறினால் விதிக்கப்படும் தண்டனைகளும் தெளிவாக அச்சிடப்பட்டு வழங்கப்பட வேண்டும் என்றும் உறுப்பினர்கள் வலியுறுத்தினர். இதுகுறித்த விழிப்புணர்வு அறிவுறுத்தல் விளம்பரங்களை மக்களுக்கு வழங்க வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டது.