கண்டி – நுவரெலியா A5 வீதி புனரமைக்க இயந்திரங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சூறாவளியால் சேதமடைந்த A5 வீதியை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க இயந்திரங்கள் மற்றும் நிபுணர் குழுக்கள் ஈடுபடுத்தப்பட்டன

டித்வா சூறாவளியால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் வீதிக் கட்டமைப்பை இயல்பு நிலைக்கு மீட்டெடுக்க CHEC Port City Colombo தனியார் நிறுவனம் ஆதரவைத் தெரிவித்துள்ளதுடன் அந்தப் பணிகளுக்காக, 24 மணி நேரத்திற்குள் அனர்த்த நிவாரண வாகனங்கள் மற்றும் நிபுணர்கள் குழுவை அனுப்ப நடவடிக்கை எடுத்துள்ளது.

இதனுடன் இணைந்த வகையில் ‘Rebuilding Sri Lanka Fund’ இற்காக 10 மில்லியன் ரூபா நிதி நன்கொடை மற்றும் தொடர்ச்சியான நிவாரண நடவடிக்கைகளுக்காக, Port City Colombo திட்ட முகாமைத்துவக் குழு மற்றும் CHEC Port City Colombo தனியார் நிறுவனத்தின் பிராந்திய அலுவலகம் ஆகியவற்றால் கூடுதலாக 03 மில்லியன் ரூபா நிதியும் திரட்டப்பட்டு நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளன.

அனர்த்தத்திற்குப் பின்னர் இலங்கையை மீண்டும் கட்டியெழுப்பும் வேலைத்திட்டத்திற்கு ஆதரவாக, பாலங்களின் புனர்நிர்மாணப் பணிகள், வீதிப் புனரமைப்பு மற்றும் பொறியியல் மதிப்பீடுகளுக்கு நிபுணத்துவ தொழில்நுட்ப அறிவு சார் உதவிகளை வழங்க CHEC Port City Colombo தனியார் நிறுவனம் நடவடிக்கை எடுத்துள்ளது.

வீதிக் கட்டமைப்பை புனர்நிர்மாணம் செய்தல், சரிவுகளை வலுப்படுத்தல் உட்கட்டமைப்பு வசதிகள் மேம்பாட்டை துரிதப்படுத்தல் ஆகியவற்றிற்காக, 12 நிர்மாணிப்பு இயந்திரங்கள் மற்றும் பயிற்சி பெற்ற தொழில்நுட்பக் குழு ஏற்கனவே மத்திய மாகாணத்திற்கு அனுப்பப்பட்டுள்ளதுடன், அகழ்வு இயந்திரங்கள், பெகோ இயந்திரங்கள் மற்றும் போக்குவரத்து டிராக் வண்டிகள் இதில் அடங்குகின்றன.

சூறாவளியால் கடுமையாக சேதமடைந்த ஒரு முக்கிய வீதிக் கட்டமைப்பான கண்டியிலிருந்து நுவரெலியா வரையிலான A5 வீதியில் இந்த நடவடிக்கைகள் மேற்கொள்ளப்படுகின்றன. இந்த வீதி சேதமடைந்துள்ளதால் பாதிக்கப்பட்ட பகுதிகளில் உள்ள மக்களுக்கு அவசர நிவாரண சேவைகளை வழங்குவதில் சவால்களை எதிர்கொள்ள வேண்டியுள்ளது.

CHEC Port City Colombo (Pvt) Ltd இன்  முகாமைத்துவப் பணிப்பாளர் Xiong Hongfeng  இனால் இந்த இயந்திரங்கள் உத்தியோகபூர்வமாக இலங்கை இராணுவத்திடம் ஒப்படைக்கப்பட்டதுடன், ஜனாதிபதியின் சிரேஷ்ட மேலதிக செயலாளர் ரஸல் அபோன்சு உள்ளிட்ட பலர் இதில் கலந்துகொண்டனர்.

Share this Article