அட்டனில் தேசிய தீபாவளி உற்சவம் இன்று (ஒக். 19) மிகுந்த கோலாகலத்துடன் நடைபெற்றது. அரசாங்கத்தின் முழுமையான அனுசரணையில் இடம்பெற்ற இந்நிகழ்வில் மும்மத குருமார்கள், புத்தசாசனம், மத மற்றும் கலாசார அலுவல்கள் அமைச்சர் கலாநிதி ஹினிதும சுனில் செனவி, மத்திய மாகாண ஆளுநர் சரத் அபயகோன், புத்தசாசனம் மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் கமகெதர திசாநாயக்க, மத மற்றும் கலாசார அலுவல்கள் பிரதி அமைச்சர் முனீர் முழப்பர், தோட்ட உட்கட்டமைப்பு வசதிகள் மற்றும் சமூக அபிவிருத்தி பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப், பாராளுமன்ற உறுப்பினர்களான மஞ்சுள சுரவீர ஆராய்ச்சி, கிருஷ்ணன் கலைச்செல்வி ஆகியோரும் கலந்து சிறப்பித்தனர்.
அத்துடன் அட்டன்–டிக்கோயா நகரசபைத் தலைவர், நோர்வூட் பிரதேச செயலாளர், நுவரெலியா மாவட்ட செயலாளர் உள்ளிட்ட அதிகாரிகள், நகர பிரமுகர்கள், பொதுமக்கள், பாடசாலை மாணவர்கள், கல்வியாளர்கள் என ஆயிரத்துக்கும் மேற்பட்டோர் பங்கேற்றனர்.
காலை 9 மணிக்கு அட்டன் ஸ்ரீ மாணிக்கப்பிள்ளையார் தேவஸ்தானத்தில் விசேட பூஜைகளுடன் விழா தொடங்கியது. அதிதிகள் ஆலய பரிபாலன சபையினரால் கௌரவிக்கப்பட்டனர். பின்னர் தேவஸ்தான முன்றலிலிருந்து கலை, கலாசார மற்றும் பாரம்பரிய நடனங்களுடன் ஊர்வலம் ஆரம்பமானது. இதில் மும்மதங்களையும் பிரதிநிதித்துவப்படுத்தும் பாடசாலை மாணவர்களின் கலாசார நிகழ்வுகள் சிறப்பாக இடம்பெற்றன.
ஊர்வலம் அட்டன் பிரின்ஸ் மண்டபத்தை வந்தடைந்ததும் தேசிய கொடியேற்றம் மற்றும் நந்தி கொடியேற்றம் நடைபெற்றது. இதில் அமைச்சர் ஹினிதும சுனில் செனவி தேசிய கொடியையும், பிரதி அமைச்சர் சுந்தரலிங்கம் பிரதீப் நந்தி கொடியையும் ஏற்றி வைத்தனர். அதன் பின்னர் பாடசாலை மாணவர்கள் முதலில் தமிழிலும் பின்னர் சிங்களத்திலும் தேசிய கீதம் இசைத்தனர்.


பின்னர் மண்டபத்தில் மங்கல விளக்கேற்றம் மற்றும் பல்வேறு கலாசார நிகழ்வுகள் — மாணவர்களின் நடனங்கள், நாட்டிய நாடகங்கள் உள்ளிட்டவை — நடைபெற்றன.

தேசிய தீபாவளி உற்சவத்தை முன்னிட்டு அட்டன் நகரம் முழுவதும் நந்தி கொடிகளால் அலங்கரிக்கப்பட்டிருந்தது. தீபாவளி தினத்தில் நகர மையம் பொருட்கள் கொள்வனவுக்காக திரண்ட மக்களால் உற்சாகமாக இருந்தபோதிலும், பலர் தீபாவளி நிகழ்வுகளிலும் கலந்துகொண்டு மகிழ்ந்தனர்.

மேலும், தேசிய தீபாவளி உற்சவத்தை ஒட்டி, விசேட நினைவு முத்திரை ஒன்று நேற்று (ஒக். 18) வெளியிடப்பட்டமை குறிப்பிடத்தக்கது.