சுன்னாகத்தில் களவாடப்பட்ட பெறுமதியான நகைகள் மற்றும் கைத்தொலைபேசிகளுடன், பல்வேறு திருட்டுச் சம்பவங்களில் தொடர்புடைய ஒருவரை ஊர்காவற்றுறை பொலிசார் கைதுசெய்துள்ளனர்.
இச்சம்பவம் இன்று (ஒகஸ்ட் 14) முற்பகல் ஊர்காவற்றுறை நாரந்தனைப் பகுதியில் இடம்பெற்றது. கிடைத்த தகவலின்படி, வழமைபோன்று பகல் நேர வீதி கண்காணிப்பில் ஈடுபட்டிருந்த, கொஸ்தாபசு ஹரிதாஸ் தலைமையிலான பொலிஸ் குழுவினர், சந்தேகத்திற்கிடமான முறையில் நடமாடிய ஒருவரை நிறுத்தி சோதனை மேற்கொண்டனர்.
அவரது காற்சட்டை பொக்கிஷத்தில் தாலிக்கொடி, சங்கிலி, மோதிரம், பென்டிரண்ட் உள்ளிட்ட நகைகள் இருந்ததை கண்டுபிடித்தனர். விசாரணையில், அவை சமீபத்தில் சுன்னாகம் பகுதியில் களவாடப்பட்ட நகைகள் என தெரியவந்தது.
தொடர்ந்து சந்தேகநபரின் வீட்டில் நடத்தப்பட்ட சோதனையில், பல நவீன கைத்தொலைபேசிகள், ஒரு தொகை பணம், இலத்திரனியல் சாதனங்கள் உள்ளிட்ட பல பொருட்கள் கைப்பற்றப்பட்டன.

இதையடுத்து, ஊர்காவற்றுறை பொலிசார் சம்பவத்தை சுன்னாகம் பொலிசாருக்கு அறிவித்து, சந்தேகநபரையும் மீட்கப்பட்ட பெறுமதியான பொருட்களையும் ஒப்படைத்தனர். சுன்னாகம் பொலிசார் அவரை தமது நிலையத்துக்கு கொண்டு சென்று மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.
அண்மைக்காலமாக யாழ்ப்பாணத்தில் திருட்டுச் சம்பவங்கள் அதிகரித்து வரும் நிலையில், இந்தக் கைது தொடர்பான விசாரணைகளில் பொலிசார் தீவிரம் காட்டி வருவதாகவும், சந்தேகநபரை மல்லாகம் நீதிமன்றில் முன்னிலைப்படுத்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்துள்ளனர்