அளவுக்கு மீறி அதிகரிக்கும் சிறுவர் பாலியல் வன்முறை சம்பவங்களை எதிர்கொள்ள அரசாங்கம் எடுத்த அதிரடி நடவடிக்கை

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

சிறுவர் துஷ்பிரயோகச் சம்பவங்களை குறைப்பதற்காக, ஒருங்கிணைந்த பன்முகத் துறைசார் அணுகுமுறையை நடைமுறைப்படுத்த அமைச்சரவையின் அனுமதி கிடைத்துள்ளது.

2025 மார்ச் 3ஆம் தேதி நடைபெற்ற அமைச்சரவைக் கூட்டத்தில் அங்கீகாரம் பெற்ற புதிய அரச கொள்கைச் சட்டகத்தின் கீழ், “பாதுகாப்பான சிறுவர் உலகம் – ஆக்கபூர்வமான எதிர்கால சந்ததி” என்ற தலைப்பின் கீழ், சிறுவர் பாதுகாப்பு மற்றும் அவர்களை எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்கள் குறித்த தேசிய அடிப்படையிலான பல துறைகளின் ஒருங்கிணைந்த செயற்பாடுகள் முன்னெடுக்கப்படுகின்றன. இதில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சு, சுகாதார மற்றும் வெகுசன ஊடக அமைச்சு, கல்வி, உயர் கல்வி மற்றும் தொழிற்கல்வி அமைச்சு, நீதி மற்றும் தேசிய ஒருமைப்பாட்டு அமைச்சு மற்றும் இலங்கை பொலிஸார் ஆகியவை முக்கிய பங்குகளை வகிக்கின்றன.

பிள்ளைகள் எதிர்கொள்ளும் துஷ்பிரயோகங்கள் மற்றும் வன்முறைகளைக் குறித்து 24 மணி நேரமும் முறைப்பாடுகளைப் பெறுவதற்கான வசதிகளை தேசிய பாதுகாப்பு அதிகாரசபை வழங்கியுள்ளது. ஆனால், அந்த முறைப்பாடுகள் முறையாக சமர்ப்பிக்கப்படாமல் விடப்படும் நிலைமை கவனிக்கப்படுகின்றது.

இந்த சிக்கலுக்கு விரைந்து சென்று தக்க நடவடிக்கை எடுக்கும் வகையில், மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சுசமர்ப்பித்த யோசனைக்கு அமைச்சரவை அங்கீகாரம் அளித்துள்ளது. அதில் அடங்கும் முக்கிய முடிவுகள் பின்வருமாறு:

  • மகளிர் மற்றும் சிறுவர் விவகார அமைச்சின் செயலாளர் தலைமையில், சம்பந்தப்பட்ட அரச மற்றும் தனியார் துறைகளின் பிரதிநிதிகள் கொண்ட தேசிய மட்டக் குழுவொன்றை உருவாக்கல்.

  • தண்டனைச் சட்டக்கோவை மற்றும் குற்றவியல் சட்டங்களை விரைவாக திருத்தி, சிறுவர்களுக்கு எதிரான உடலியல் தண்டனைகளை முற்றாக நீக்கக்கூடிய வழி வகுத்தல்.

  • பாதிக்கப்பட்ட பிள்ளைகள் மீண்டும் மனவேதனையை எதிர்கொள்ளாத வகையில், ஊடக ஒழுக்கநெறிக் கோவையை விரைவில் வெளியிடும் போது அதில் தேவையான பாதுகாப்பு ஏற்பாடுகளை உட்சேர்த்தல்.

  • பிள்ளைகளின் தனிப்பட்ட விபரங்கள் வெளிக்கொணரப்படுவதைத் தவிர்க்க, வெகுசன ஊடகங்கள் மற்றும் சமூக ஊடகத் தொடர்பாளர்களின் செயற்பாடுகளை ஒழுங்குபடுத்த, குற்றத்தால் பாதிக்கப்படுபவர்கள் மற்றும் சாட்சியாளர்களுக்கான பாதுகாப்பு அதிகாரசபை, அரச சார்பற்ற அமைப்புகளுக்கான தேசிய செயலகம் மற்றும் இலங்கை தொலைத்தொடர்பு ஒழுங்குபடுத்தல் ஆணைக்குழுவின் உடனடி தலையீடுகளை உறுதி செய்தல்.

Share this Article