யாழ் தீவகங்களுக்கான உத்தியோகபூர்வ விஜயத்தை மேற்கொண்டுள்ள தென்னை, கித்துல், பனை மற்றும் இறப்பர் செய்கை மேம்பாடு மற்றும் அவை சார்ந்த கைத்தொழில் பண்டங்கள் உற்பத்தி மற்றும் ஏற்றுமதி பல்வகைப்படுத்தல் இராஜாங்க அமைச்சர் மாண்புமிகு அருந்திக பெர்ணாண்டோ அவர்கள் இன்று (மாா்ச் 06) நெடுந்தீவிற்கான விஜயத்தை மேற்கொண்டு நெடுந்தீவு பிரதேச செயலகத்திற்கு வருகை தந்தார்.
அமைச்சர் விஜயத்தின் போது யாழ் மாவட்ட அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கெளரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் உடனிருந்தார். அத்துடன் பெரமுன கட்சியின் யாழ்மாவட்ட அமைப்பாளா் மற்றும் தீவக அமைப்பாளா் ஆகியோரும் கலந்து கொண்டனா்.
இவ் விஜயத்தின் போது அமைச்சருடன் கலந்தாலோசிப்பதற்காக நெடுந்தீவு பிரதேச பனை, தென்னை உற்பத்திதுறை சார் தொழில் புரிவோர், சம்மந்தப்பட்ட அதிகாரிகள் வருகை தந்து கலந்துரையாடலில் ஈடுபட்டனர்.
இவ் நிகழ்வு நெடுந்தீவு பிரதேச செயலகத்தின் மாநாட்டு மண்டபத்தில் பிரதேச செயலாளர் மதிப்புமிக்க திரு.எஸ்.சி.சத்தியசோதி அவர்களின் தலைமையில் நடைபெற்றது.
இந் நிகழ்வில் சுற்றுலா நோக்கத்திற்காகவும், பனை தென்னை உற்பத்தியாளர்கள் விற்பனையாளர்களுக்கு விற்பனை செய்வதன் ஊடாக உள்ளூர் உற்பத்தி பொருட்கள் மூலம் இலபகரமான விற்பனை பரிமாற்றலை ஏற்படுத்த முடியும் எனவும் ஆலோசனை வழங்கினார்.
உள்ளூர் விற்பனையாளர்களின் வேண்டுகோளிற்கிணங்க “நெடுந்தீவு” என்ற வர்த்தக நாமத்துடன் உள்ளூர் உற்பத்தி பொருட்கள் சந்தைப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என கெளரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் கேட்டுகொண்டார்.
அதற்கு பூரண சம்மதத்தை அமைச்சர் தெரிவித்துள்ளதுடன் நெடுந்தீவு வர்த்தக நாமத்துடன் சந்தைப்படுத்தும் உற்பத்தி பொருட்களின் உற்பத்தி உயர்வு மட்டத்தை வருடாவருடம் பார்வையிட்டு உற்பத்தியை பெருக்க நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் தெரிவித்தார்.
நெடுந்தீவில் ATM & CDM இயந்திரங்களை பொருத்த உடன் நடவடிக்கை.
அபிவிருத்தி ஒருங்கிணைப்புக்குழு இணைத்தலைவர் கெளரவ அங்கஜன் இராமநாதன் அவர்கள் பிரதேச அபிவிருத்தி கலந்துரையாடலில் இவ் விடயம் பற்றி கலந்துரையாடப்பட்டதாக குறிப்பிட்டு தீர்வு பெற்றுக்கொடுக்கப்பட வேண்டும் என தெரிவித்தார்.
இவரது கோரிக்கையை ஏற்ற அமைச்சர் கொடுக்கல் வாங்கல் பரிமாற்றங்களில் நெடுந்தீவில் தொழில்முனைவோர்கள் சிரமங்களை எதிர்கொள்வதால் பணவைப்பு (CDM) மற்றும் பணம் மீளப்பெறல் (ATM) இயந்திரங்களை அமைக்க இலங்கை வங்கி தலைமை முகாமையாளருடன் கலந்தாலோசித்து நடவடிக்கை எடுத்துள்ளதுடன் இலங்கை வங்கியின் (ATM,CRM) இயந்திரம் விரைவில் பொருத்ப்பட்டு மக்கள் பாவனைக்கு கையளிக்கப்படும் என தெரிவித்தார்.
அத்தோடு நெடுந்தீவில் பிரதேச செயலாளரின் விடாமுயற்சியால் சிறப்பாக இயங்கிவருகின்ற பனம் பொருள் உற்பத்தி நிலையத்தையும் பார்வையிட்டு பல்வேறுபட்ட ஆலோசனைகள், அறிவுரைகள், நம்பிக்கை உறுதிமொழிகளையும் வழங்கினார் என்பது குறிப்பிடத்தக்கது.