இலங்கையை நெருங்கும் வல்லரசுகளின் போர் மேகம்!

SUB EDITOR
SUB EDITOR
2 Min Read

மத்திய கிழக்கில் தீவிரமடைந்துள்ள அமெரிக்க-ஈரான் போர், தற்போது இந்து சமுத்திரப் பிராந்தியத்திற்கும் பரவியுள்ளது. வல்லரசு நாடுகளின் இந்த மோதலில் எவ்வித நிலைப்பாட்டினையும் வெளிப்படுத்தாது, நடுநிலை வகித்து வந்த இலங்கையின் கடற்பரப்பிற்கு மிக அண்மையில் இந்தத் தாக்குதல்கள் இடம்பெற்றுள்ளமை பெரும் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.

சர்வதேச ஊடகமான ‘அல் ஜசீரா’ வெளியிட்டுள்ள உறுதிப்படுத்தப்பட்ட தகவல்களின்படி, இலங்கையின் கடற்பரப்பிற்குச் சற்று வெளியே, இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பல் ஒன்று தற்போது முகாமிட்டுள்ளது.

அமெரிக்க நீர்மூழ்கியின் கொடிய தாக்குதல் கடந்த புதன்கிழமையன்று, சர்வதேசக் கடற்பரப்பிலமைந்துள்ள இலங்கையின் எல்லைக்கு மிக அண்மையில் வைத்து, ஈரானியப் போர்க்கப்பல் ஒன்றின் மீது அமெரிக்காவின் நீர்மூழ்கிக் கப்பல் டொர்பிடோ ஏவுகணைத் தாக்குதலை மேற்கொண்டு அதனை முழுமையாக மூழ்கடித்திருந்தது.

இந்தத் தாக்குதல் இடம்பெற்ற அதே பகுதி நோக்கியே, தற்போது 100 இற்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களைத் தாங்கிய இரண்டாவது ஈரானியப் போர்க்கப்பல் நகர்ந்து கொண்டிருப்பதாகத் தகவல்கள் வெளியாகியுள்ளன.

இலங்கை அரசாங்கத்தின் உத்தியோகபூர்வ அறிவிப்பு

இந்தத் தகவலை இலங்கை அரசாங்கமும் உத்தியோகபூர்வமாக உறுதிப்படுத்தியுள்ளது.

இது தொடர்பில் கருத்துத் தெரிவித்துள்ள ஊடகத்துறை அமைச்சர் நலிந்த ஜயதிஸ்ஸ, குறித்த ஈரானியப் போர்க்கப்பலானது இலங்கையின் கடற்பரப்பு எல்லைக்குச் சற்று வெளியிலேயே நிலைநிறுத்தப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்டுள்ளார்.

அதேவேளை, அமைச்சரவைப் பேச்சாளர் இது குறித்துக் கருத்து வெளியிடுகையில், “இலங்கைக் கடலோரப் பகுதிக்கு அப்பால் உள்ள குறித்த ஈரானியக் கப்பலில் தங்கியிருக்கும் வீரர்களின் உயிர்களைப் பாதுகாப்பதற்கான முயற்சிகளை இலங்கை அரசாங்கம் மேற்கொண்டு வருகின்றது” எனத் தெரிவித்துள்ளார்.

இராஜதந்திர நெருக்கடியில் இலங்கை அமெரிக்காவின் தாக்குதலால் மூழ்கடிக்கப்பட்ட தமது முதலாவது கப்பலின் மாலுமிகளை மீட்பதற்கா அல்லது அமெரிக்கப் படைகளுக்குப் பதிலடி கொடுப்பதற்கா இந்த இரண்டாவது ஈரானியக் கப்பல் அப்பகுதிக்கு விரைந்துள்ளது என்பது தொடர்பில் இதுவரை எவ்வித உத்தியோகபூர்வ அறிவிப்புக்களும் வெளியாகவில்லை.

எவ்வாறாயினும், இந்து சமுத்திரப் பிராந்தியத்தில், குறிப்பாக இலங்கைக்கு மிக அண்மையில் வல்லரசு நாடுகளின் இவ்வாறான நேரடி மோதல்கள் இடம்பெறுவதானது, பிராந்தியப் பாதுகாப்பிற்கும், இலங்கையின் இராஜதந்திர நிலைப்பாட்டிற்கும் ஒரு மாபெரும் சவாலாகவே அமைந்துள்ளது எனச் சர்வதேச அரசியல் அவதானிகள் சுட்டிக்காட்டுகின்றனர்.

Share this Article
Leave a comment