வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் நிறைவேற்றம்!

Anarkali
Anarkali  - Senior Editor
1 Min Read

2024ஆம் ஆண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் 45 மேலதிக வாக்குகளால் சற்றுமுன் நாடாளுமன்றத்தில் நிறைவேற்றப்பட்டுள்ளது. வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக 122 வாக்குகளும் எதிராக 77 வாக்குகளும் அளிக்கப்பட்டன.

ஐக்கிய மக்கள் சக்தி, தேசிய மக்கள் சக்தி, தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு ஆகிய கட்சிகள் வரவு – செலவுத் திட்டத்தை எதிர்த்து வாக்களித்தன. பொதுஜன பெரமுனவில் இருந்து சுயாதீனமாக இயங்கும் நாடாளுமன்ற உறுப்பினர்களும் எதிர்த்தே வாக்களித்தனர்.

எதிர்க்கட்சி உறுப்பினர்களான வடிவேல் சுரேஸ் மற்றும் ஹெக்டர் ஹப்புகாமி ஆகியார் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தனர். தங்கக் கடத்தல் விவகாரத்தில் சிக்கிய அலி சப்ரி ரஹீம் எம்.பியும் வரவு – செலவுத் திட்டத்துக்கு ஆதரவாக வாக்களித்தார். டளஸ் அழகப்பெரும தலைமையில் அணியினரும் வரவு – செலவுத் திட்டத்துக்கு எதிராக வாக்களித்தனர்.

2024ஆம் நிதியாண்டுக்கான வரவு – செலவுத் திட்டம் ஜனாதிபதி ரணில் விக்ரமசிங்கவால், நிதி, பொருளாதார ஸ்திரப்படுத்தல் மற்றும் தேசிய கொள்கைகள் அமைச்சர் என்ற வகையில் கடந்த 13ஆம் திகதி சபையில் சமர்ப்பிக்கப்பட்டது.

மறுநாள் 14ஆம் திகதி முதல் ஆரம்பமான இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் இன்று 7ஆவது நாளாக நாடாளுமன்றத்தில் இடம்பெற்றதுடன், இன்று மாலை இரண்டாம் வாசிப்பு மீதான விவாதம் நடைபெற்றது.

குழுநிலை அல்லது மூன்றாம் வாசிப்பு மீதான விவாதம் நாளை (நவ.22) முதல் டிசம்பர் 13ஆம் திகதிவரை நடைபெற உள்ளது. மூன்றாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு அன்று மாலை 6 மணிக்கு நடைபெற உள்ளது.

இரண்டாம் வாசிப்பு மீதான வாக்கெடுப்பு இன்று மாலை நாடாளுமன்றத்தில் நடைபெற்றது. அதில் அரசாங்கம் வெற்றிக்கண்டுள்ளது.

Share this Article