யாழ்ப்பாணம், மாதகலில் கடற்படையினருக்கு காணி சுவீகரிப்பதற்காக மேற்கொள்ளப்பட்ட அளவீட்டு முயற்சி இன்று (20) காலை தடுத்து நிறுத்தப்பட்டுள்ளது. பொதுமக்களும், தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி சுகாசும் இணைந்து அந்த முயற்சியை தடுத்து நிறுத்தினர்.
மாதகல் துறையில் கடற்படையினரின் கண்காணிப்பு நிலை அமைந்துள்ள தனியார் காணிகளை நிரந்தரமாக சுவீகரிக்க ஏதுவாக, இன்று அளவீட்டுக்கு திட்டமிடப்பட்டிருந்தது. காணி உரிமையாளர்களிற்கு அது குறித்து அறிவிக்கப்பட்டிருந்தது.
இன்று காலை அங்கு பொதுமக்கள், சட்டத்தரணி க.சுகாஷ் தலைமையிலான தமிழ் தேசிய மக்கள் முன்னணியினர் குழுமி, காணி அளவீட்டு முயற்சிக்கு எதிராக போராட்டம் நடத்தினர்.
காணி உரிமையாளர்களை கடற்படையினர், பொலிசார், நில அளவை திணைக்களத்தினர் சந்தித்து சமரச முயற்சிக்கு முயன்றனர். எனினும், காணியை வழங்க முடியாதென்பதில் காணி உரிமையாளர்கள் விடாப்பிடியாக நின்றனர்.
இதையடுத்து அளவீட்டு முயற்சி தோல்வியடைந்தது. காணியை வழங்க மாட்டோம் என காணி உரிமையாளர்கள் கையொப்பமிட்ட கடிதத்தை, நில அளவைத் திணைக்களத்திடம் வழங்கினர். அதை பெற்றுக்கொண்டு, அளவீட்டு முயற்சியை கைவிட்டு நிலஅளவை திணைக்களத்தினர் அங்கிருந்து சென்றனர்.
இந்த நடவடிக்கையில் காணி உரிமையாளர்களிற்கான சட்ட வழிகாட்டல்களை தமிழ் தேசிய மக்கள் முன்னணியின் சட்டத்தரணி க.சுகாஷ் வழங்கினார்.