எதிர்வரும் 25ஆம் திகதி நடத்தப்படவுள்ள கதவடைப்புப் போராட்டதுக்கு அனைத்துத் தரப்பினரும் ஆதரவு வழங்க வேண்டும் என்று தமிழ்த் தேசியக் கட்சிகள் கூட்டாகக் கோரிக்கை விடுத்துள்ளன.
இலங்கைத் தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா, தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் தலைவர் அ.அடைக்கலநாதன், ஜனநாயக மக்கள் விடுதலை முன்னணியின் தலைவர் த.சித்தார்த்தன், ஈழமக்கள் புரட்சிக விடுதலை முன்னணியின் தலைவர் க.பிரேமச்சந்திரன், தமிழ்த் தேசியக் கட்சியின் தலைவர் ந.சிறீகாந்தா, ஜனநாயகப் போராளிகள் கட்சியின் தலைவர் சி.வேந்தன் ஆகியோரின் கையொப்பத்துடன் வெளியாகியுள்ள அறிக்கையிலேயே மேற்கண்டவாறு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது-
பயங்கரவா எதிர்ப்புச் சட்டமூலம் நாடாளுமன்றத்தில் சமர்ப்பிக்கப்படவுள்ள நிலையில் எமது இனத்துக்குப் பாதகமான அதன் கடுமையான விளைவுகளை கருத்தில் கொண்டு எமது எதிர்ப்பை வெளிப்படுத்தவும்,
எமது இனத்தின் இருப்பைக் கேள்விக்குறியாக்கும் பேரினவாத அரசின் திட்டமிட்ட எமது சுயநிர்ணய உரிமையை நீர்த்துப் போக வைக்கும் வகையில் எமது தாயக மண்ணில் முன்னெடுக்கப்படும் நில அபகரிப்பு, குடியேற்றங்களின் மூலம் குடிப்பரம்பலைச் சிதைத்தல், எமது தொன்மையை நிரூபிக்கும் சான்றுகளை அழித்தொழித்தல், இதற்கு ஏதுவாக தமிழ் இனத்தின் தொன்மையை நிரூபிக்கும் சான்றுகளான சைவ ஆலயங்களை இடித்தும் அழித்தும் அங்கு பௌத்த சின்னங்களை நிறுவியும் இந்த நாட்டின் பூர்வ குடிகளான தமிழ் மக்களின் வரலாற்றைச் சிதைக்கும் அரசின் அனைத்து கட்டமைப்புக்களின் செயற்பாடுகளை எதிர்த்தும்,
அரசியல் கட்சிகள், மத அமைப்புக்கள், பொதுக் கட்டமைப்புக்கள், தொழிற்சங்கங்கள், பல்கலைக்கழக மாணவர்கள் மற்றும் தமிழ்த் தேசியப் பற்றாளர்கள் என அனைத்துத் தமிழ் மக்களும் ஒன்றிணைந்து 25.04.2023 அன்று எமது தாயகப் பிரதேசத்தில் அனைத்து வர்த்தக, நிர்வாக சேவைகளை முடககி வடக்கு, கிழக்குத் தழுவிய பூரண ஹர்த்தால் அனுஷ்டிக்கத் தீர்மானித்துள்ளோம்.
அதற்கு தங்களின் பரிபூரண ஆதரவைக் கோரி நிற்கின்றோம் – என்றுள்ளது.