2026ஆம் ஆண்டுக்கான கல்விப் பொதுத் தராதர உயர்தரப் பரீட்சை இன்று (10/08) நாடளாவிய ரீதியில் ஆரம்பமாகிறது. எதிர்வரும் செப்டெம்பர் 05ஆம் திகதி வரை நடைபெறவுள்ள இப்பரீட்சை, நாடு முழுவதும் 2,532 பரீட்சை நிலையங்களில் நடைபெறவுள்ளது.
இம்முறை உயர்தரப் பரீட்சைக்கு 264,496 பாடசாலைப் பரீட்சார்த்திகளும், 107,814 தனிப்பட்ட பரீட்சார்த்திகளும் உட்பட மொத்தம் 372,310 பேர் தோற்றவுள்ளதாக பரீட்சைகள் திணைக்களம் தெரிவித்துள்ளது.
பரீட்சை ஆரம்பிப்பதற்கு குறைந்தது ஒரு மணித்தியாலத்திற்கு முன்னதாகவே பரீட்சார்த்திகள் தங்களுக்குரிய பரீட்சை நிலையங்களுக்கு வருகை தருமாறு பரீட்சை ஆணையாளர் நாயகம் இந்திகா குமாரி அறிவுறுத்தியுள்ளார்.
அத்துடன், கைத்தொலைபேசிகள், ஸ்மார்ட் கடிகாரங்கள், குறிப்புகள், புளூடூத் சாதனங்கள் உள்ளிட்ட எந்தவொரு மின்னணு சாதனங்களையும் பரீட்சை மண்டபத்திற்குள் கொண்டு செல்வது முற்றாகத் தடை செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார்.
பரீட்சை விதிமுறைகளை முறையாகப் பின்பற்றி, எந்தவிதமான பரீட்சை மோசடிகளிலும் ஈடுபடுவதைத் தவிர்க்குமாறும் பரீட்சார்த்திகளிடம் அவர் கேட்டுக்கொண்டுள்ளார். கடந்த வருடங்களில் பரீட்சை மோசடிகளில் ஈடுபட்டதன் காரணமாக பல பரீட்சார்த்திகளின் பெறுபேறுகள் இடைநிறுத்தப்பட்டிருந்ததாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
மேலும், ஏதேனும் அவசரகால அல்லது அனர்த்த நிலைமை ஏற்பட்டால், அதற்குத் தேவையான வசதிகளை ஏற்படுத்திக் கொடுக்க பரீட்சைகள் திணைக்களம் முழுமையாகத் தயாராக இருப்பதாகவும் பரீட்சை ஆணையாளர் நாயகம் தெரிவித்தார்.