வழக்கு விசாரணைக்காக மன்னார் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டு, மீண்டும் வவுனியா சிறைச்சாலைக்குக் கொண்டு வந்தபோது தப்பியோடி சிறைக்கைதிகளில் ஒருவர் தமிழகத்துக்குத் தப்பிச் சென்றுள்ளார்.
மன்னார் தோட்டவெளி ஜோசப்வாஸ் நகர் பகுதியை சேர்ந்த செல்வராஜ் சிந்துஜன் என்பவரே கடல் மார்க்கமாக தமிழகம் சென்று மண்டபம் அகதி முகாமில் இன்று(பெப்ரவரி 21) தஞ்சமடைந்துள்ளார்.
சிந்துஜனின் தந்தை செல்வராஜ் கடந்த ஞாயிற்றுக்கிழமை ராமேஸ்வரம் நகர் பொலிஸ் நிலையத்தில் தஞ்சம் அடைந்த நிலையில் இன்று செவ்வாய்க்கிழமை காலை சிந்துஜன் மண்டபம் அகதி முகாமில் தஞ்சம் அடைந்துள்ளார். இந்தச் சம்பவம் தொடர்பில் தமிழக உளவுத்துறை விசாரணைகளை ஆரம்பித்துள்ளது.
மன்னார் நீதிமன்றத்தில் நடைபெற்ற வழக்கு விசாரணைக்காக வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த இவர் வழக்குக்காக மன்னார் நீதிமன்றத்துக்குக் கொண்டு செல்லப்பட்டிருந்தார். விசாரணைகள் முடிந்து மீள வவுனியா சிறைக்கு அழைத்து வரப்பட்டபோதே இவரும், மற்றொருவரும் கைவிலங்குடன் தப்பியோடினர்.
இந்தச் சம்பவங்கள் தொடர்பில் பொலிஸார் விசாரணைகளை முன்னெடுத்து வரும் நிலையில், தப்பியோடிய மற்றைய கைதியைக் கைது செய்யும் நடவடிக்கைகள் முன்னெடுக்கப்படுகின்றன என்று தெரிவிக்கப்பட்டது.