நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவானுக்கு பயணிகளுடன் வந்த வடதாரகை இன்று காலை (மே 13) சீரற்ற காலநிலையால் தரை தட்டியது. அதனை மீட்கும் முயற்சியில் கடற்படையினருடன் இணைந்து பொதுமக்களும் பௌத்த மத குருவும் ஈடுபட்டனர்.
இன்று மாலை படகு கரைசேர்க்கப்பட்டு குறிகாட்டுவானில் தரித்து நின்ற பயணிகளையும் ஏற்றாமல் நெடுந்தீவுக்கு சென்றுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
இன்று காலை நெடுந்தீவில் இருந்து குறிகாட்டுவான் சேவையில் ஈடுபட்ட வடதாரகை படகு கடும் காற்று காரணமாக குறிகாட்டுவான் கரையில் தரை தட்டியதால் பயணிகள் பெரும் சிரமங்களுடன் பாதுகாப்பாக நயினாதீவு படகுகள் மூலம் ஏற்றி குறிகாட்டுவானில் விடப்பட்டனர்.
இதேவேளை யாழ் நகரில் இருந்து நெடுந்தீவு செல்ல சென்ற பெருமளவு பயணிகள் குறிகாட்டுவானில் காத்திருந்து மாலை 2.30 மணிக்கு சென்ற தனியார் படகிலேயே சென்றதாக அங்கிருந்துவரும் செய்திகள் தெரிவிக்கின்றன.
இதேவேளை நெடுந்தீவு குறிகட்டுவான் இடையிலான மாலை நேர மாற்று படகு சேவை ஓழுங்கு செய்யப்படாமையால் 40 இற்கும் மேற்பட்ட பயணிகள் ஏமாற்றத்துடன் யாழ்நகர் திரும்பியுள்ளமை குறிப்பிடத்தக்கது.
இந்த நிலையில் வீதி அபிவிருத்தி அதிகார சபைக்கு சொந்தமான இப்படகு தரைதட்டியபோதும் அப்பகுதியில் அதன் அதிகாரிகளோ, ஊழியர்களோ எவரும் இல்லை என பொதுமக்கள் தரப்பில் விசனம் தெரிவிக்கப்படுகின்றது.