வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமான பற்றிக்கோட்ட செமினரியினதும் 200 ஆவது ஆண்டு நிறைவை முன்னிட்டு பழைய மாணவர் ஒன்றுகூடல் வாரம் ஜூலை 15 ஆம் திகதி முதல் ஜூலை 22 ஆம் திகதிவரை கோலகலமாக இடம்பெறவுள்ளது.
இதுதொடர்பில் பழைய மாணவர் ஏற்பாட்டுக்குழு அனுப்பிவைத்துள்ள ஊடக அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,
யாழ்ப்பாணக் கல்லூரியும் அதனது தாய்க் கல்வி நிறுவனமாகிய பற்றிக்கோட்டா செமினரியும் 1823 ஆம் ஆண்டு முதல் கடந்த 200 வருடங்களாக வழங்கிய கல்விப் பணியினையும், சமூகப் பணியினையும் நினைவுகொள்ளல் – கொண்டாடுதல் – அவை குறித்துச் சிந்தித்தல் மற்றும் கல்லூரியின் எதிர்காலப் பயணம் குறித்துத் திட்டமிடும் வகையிலுமான பழைய மாணவர் வார நிகழ்வுகள் எதிர்வரும் ஜூலை 15 ஆம் திகதி தொடக்கம் ஜூலை 22ஆம் திகதிவரை வட்டுக்கோட்டை யாழ்ப்பாணக் கல்லூரி வளாகத்திலே மிகவும் கோலாகலமான முறையிலே இடம்பெறவுள்ளன.
உலகம் முழுவதிலும் இருந்து வரும் கல்லூரியின் பழைய மாணவர்கள் இந்த நிகழ்வுகளில் பங்கேற்கவுள்ளனர்.
ஆரம்ப நிகழ்வாகப் பழைய மாணவர்களினால் ஏற்பாடு செய்யப்பட்ட வாகன ஊர்தி – நடைபவனி எதிர்வரும் சனிக்கிழமை (ஜூலை 15) அன்று காலை 7 மணிக்குக் கல்லூரி வாசலில் இருந்து ஆரம்பமாகி, கோட்டைக்காடு, அராலி, செட்டியார்மடம், துணைவி, நவாலி, ஆனைக்கோட்டை, மானிப்பாய், சண்டிலிப்பாய், பண்டத்தரிப்பு, சித்தங்கேணி, வட்டுகோட்டை வழியாக யாழ்ப்பாணக் கல்லூரியினை வந்தடையும்.
16 ஆம் திகதி ஞாயிற்றுக்கிழமை நன்றிகூரல் ஆராதனை தென்னிந்தியத் திருச்சபையின் யாழ். ஆதீனத்தின் வட்டுக்கோட்டையில் அமைந்துள்ள பேராலயத்திலே முற்பகல் 9 மணிக்கு இடம்பெறவுள்ளது.
தொடர்ந்து ஞாயிற்றுக்கிழமை முற்பகல் கசூரினாக் கடற்கரையில் பழைய மாணவர்கள் ஒன்றுகூடி அன்றைய பொழுதினைக் கழிப்பர்.
மறுநாள் ஜூலை 17ஆம் திகதி திங்கட்கிழமை முதல் ஜூலை 22 வெள்ளிக்கிழமை வரை பிற்பகலிலே பழைய மாணவர்கள் பங்கேற்கும் பல்வேறு விளையாட்டு நிகழ்வுகள் இடம்பெறவுள்ளன.
திங்கட்கிழமை (ஜூலை 17) அன்று மாலை 4 மணியில் இருந்து யாழ்ப்பாணக் கல்லூரியில் தற்போது கற்கும் மாணவர்களின் கலை, கலாசார நிகழ்வுகள் ஒட்லி மண்டபத்திலே இடம்பெறும்.
செவ்வாய்க்கிழமை (ஜூலை 18) அன்று மாலை 6 மணிக்கு 1980களிலே கல்லூரி மாணவர்கள் மற்றும் ஆசிரியர்களின் பங்குபற்றலுடன் கல்லூரி மாணவர்களினால் உருவாக்கப்பட்ட “கல்லூரி வசந்தத்தில்” என்ற திரைப்படம் திரையிடப்படும்.
புதன்கிழமை (ஜூலை 19) மாலை 6 மணி முதல் இரவு 8.30 மணி வரை பற்றிக்கோட்டா செமினரி, யாழ்ப்பாணக் கல்லூரி என்பவற்றின் வரலாறு, சிறப்பம்சங்கள், தற்காலத்தில் யாழ்ப்பாணக் கல்லூரி ஆற்றும் – ஆற்ற வேண்டிய பணிகள், கல்லூரியின் எதிர்காலத்துக்கான பாதைகள் போன்ற விடயங்கள் தொடர்பில் கருத்துப் பகிர்வுகளும், பொதுக்கூட்டம் ஒன்றும் இடம்பெறும்.
இந்த நிகழ்வில் கல்லூரியின் ஆளுநர் சபையின் தலைவர் பேராயர் அருட்கலாநிதி வே. பத்மதயாளன், கல்லூரியின் அதிபர் திருமதி ருஷிறா குலசிங்கம், கல்லூரியின் முன்னாள் அதிபர் பேராயர் கலாநிதி எஸ். ஜெபநேசன், கல்லூரியின் ஆளுநர் சபைக்கான பழைய மாணவர்களின் பிரதிநிதி ரீ. எதிராஜ், சென் ஜோன்ஸ் தொழிற்பயிற்சி நிலையத்தின் (மட்டக்களப்பு) இயக்குநர் கலாநிதி. தர்சன் அம்பலவாணர், பெண்கள் கல்வி ஆய்வு நிறுவனத்தின் நிருவாக இயக்குநரும் முன்னாள் உடுவில் மகளிர் கல்லூரியின் அதிபருமான திருமதி. ஷிராணி மில்ஸ், யாழ்ப்பாணப் பல்கலைக்கழகத்தின் கணினி விஞ்ஞானத்துறையின் மூத்த விரிவுரையாளர் கலாநிதி கெங்காதரஐயர் சர்வேஸ்வரன் ஆகியோர் உரையாற்றவுள்ளனர்.
நிகழ்விலே கலந்துகொள்ளுவோர் பங்கேற்கும் திறந்த உரையாடல் ஒன்றும் பொதுக் கூட்டத்தின் ஒரு பகுதியாக இடம்பெறும்.
வியாழக்கிழமை (ஜூலை 20) மாலை 6 மணி தொடக்கம் பழைய மாணவர்கள் பங்கேற்கும் கலாசார நிகழ்வுகள் ஒட்லி மண்டபத்திலே இடம்பெறும்.
சனிக்கிழமை (ஜூலை 22 ) 4 மணிக்கு யாழ்ப்பாணக் கல்லூரியின் வருடாந்தப் பரிசளிப்பு விழா இடம்பெறும். ஜூலை 22 ஆம் திகதியுடன் பழைய மாணவர் வார நிகழ்வுகள் முடிவுக்கு வருகின்றன.
கல்லூரியின் முன்னாள் மற்றும் தற்போதைய நிருவாகிகள், ஆசிரியர்கள், ஊழியர்கள், மாணவர்கள், நலன்விரும்பிகள், கல்வித் துறை சார்ந்த ஆர்வலர்கள் அனைவரினையும் இந்த நிகழ்வுகளிலே கலந்துகொள்ளும்படி ஏற்பாட்டாளர்கள் அன்புடன் அழைக்கிறார்கள்.
தொடர்புகளுக்கு:
நிஷாந்தினி – 0770834132
செந்தூரன் – 0779599364
சதீஸ் – 0779587712
ஏற்பாட்டுக் குழு
பழைய மாணவர் வாரம்
யாழ்ப்பாணக் கல்லூரிப் பழைய மாணவர் சங்கம்
09 ஜூலை 2023