2023 ஆம் ஆண்டிற்கான வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கான மாவட்ட மட்ட முன்னாயத்த கலந்துரையாடல் யாழ்.மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலையத்தின் ஏற்பாட்டில் மாவட்டச் செயலாளர் அ. சிவபாலசுந்தரன் அவர்களின் தலைமையில் மாவட்ட செயலக கேட்போர் கூடத்தில் நேற்றுமுன்தினம் (நவம்பர் 14) பிற்பகல் 3 மணியளவில் நடைபெற்றது.
குறித்த கலந்துரையாடலில் வெள்ளம் தேங்கி நிற்கக்கூடிய சாத்தியமுள்ள இடங்களில் பொதுமக்களுக்கு ஏற்படக்கூடிய பாதிப்புக்களை குறைப்பதற்கான முன்னேற்பாடுகள், வடிகால்கள் சீரமைப்பு, பாதுகாப்பற்ற கிணறுகளை அடையாளப்படுத்தல் , ஆபத்தான பாரிய மரங்கள் மற்றும் மரக்கிளை ஆகியவற்றை அடையாளங்கண்டு உரிய நடவடிக்கை எடுத்தல் உள்ளிட்ட வடகீழ் பருவப்பெயர்ச்சி மழைக்கால முன்னாயத்த நடவடிக்கைகள் தொடர்பாக ஆராயப்பட்டன.
இக்கலந்துரையாடலில் மாவட்ட மேலதிக அரசாங்க அதிபர், மாவட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பிரதிப்பணிப்பாளர், உதவிமாவட்டச் செயலாளர், பிரதேச செயலாளர்கள், உதவிப் பிரதேச செயலாளர்கள், பிரதேச சபை பிரதிநிதிகள்,சுகாதார திணைக்கள பிரதிநிதிகள், பொலீஸ் அதிகாரிகள், முப்படைகளின் பிரதிநிதிகள் மற்றும் மாவட்ட மட்ட அனர்த்த முகாமைத்துவ நிலைய பங்குதாரர்கள் உள்ளிட்ட துறைசார் உத்தியோகத்தர்கள் கலந்து கொண்டனர்.